மதுரையில் உருவாக்கப்படும் தகவல் தொழில் நுட்ப பூங்காவுக்கு விரைவில் அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் என்று முதல்வர் கருணாநிதி சட்டப் பேரவையில் கூறினார்.
சட்டசபையில் ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர் ஞா.செந்தமிழன் பேசுகையில், புதிதாக தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் தொடங்க முதலீட்டாளர்கள் முன்வருவதில்லை என்பது அரசுக்கு தெரியுமா?
முதலமைச்சர் கருணாநிதி பதில் அளிக்கையில், கட்டுமான நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பம் பெற்றவுடன் 10 அல்லது 15 தினங்களுக்குள் எல்காட் நிறுவனத்தால் மறுப்பின்மைச் சான்றிதழ்கள் துரிதமாக வழங்கப்பட்டு வருகின்றன.
ஞா.செந்தமிழன் : இந்த அரசு வந்த பின்பு எத்தனை சதுர அடிகள் பரப்பளவிற்கு என்.ஓ.சி. வழங்கப்பட்டுள்ளது?
கருணாநிதி : இந்த ஆட்சி பொறுப்பேற்ற கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 93 கம்பெனிகளுக்கு - தகவல் தொழில்நுட்பவியல் கட்டடங்களுக்கு 3 கோடியே 42 லட்சத்து 70 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்ட அளவுக்கு மறுப்பின்மைச் சான்றிதழ் வழங்கியுள்ளது. ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் மூன்றரை ஆண்டு காலத்தில் 107 தடையின்மை சான்றுகள் 2 கோடியே 66 லட்சத்து 40 ஆயிரம் சதுர
அடி பரப்பளவு கொண்ட இடத்திற்கு மட்டுமே மறுப்பின்மை சான்றிதடிந வழங்கப்பட்டது.
பீட்டர் அல்போன்ஸ் (காங்) : கட்டடத்திற்கு அனுமதி வழங்கப்படுவதற்கு முன்னாலேயே அந்தப் பணத்தைக் கட்டினால் தான்
அனுமதி என்ற சூழ்நிலை உள்ளது. நிலத்தின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. கட்டடப் பொருட்களின் விலையும்
உயர்ந்துள்ளது. இந்தச் சுமையைக் குறைக்க அரசு முன் வருமா?
கருணாநிதி : அது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தலைமைச் செயலாளரிடம் கூறியிருக்கிறேன்.
நன்மாறன் : மதுரையில் தகவல் தொழில் நுட்பப் பூங்கா எப்போது இயங்கத் தொடங்கும், எப்போது
மணம் பரப்பும் என்பதை அறிய விரும்புகிறேன்.
கருணாநிதி : அந்தப் பூங்காவை உருவாக்க முனைந்திருப்பவர்கள் அதன் அடிக்கல் நாட்டு விழாவிற்காக என்னிடம் தேதி கேட்டிருக்கிறார்கள். விரைவில் தேதி அளிக்கப்பட்டு, அந்த அடிக்கல் நாட்டு விழா நடைபெறும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.