தமிழகத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு தமிழக முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியமாக குற்றம்சாற்றப்பட்டுள்ள மு.க.அழகிரி சித்தூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.
தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான கருணாநிதியின் மகன் மு.க. அழகிரி, இந்த படுகொலை வழக்கில் தொடர்புடையதாக குற்றம் சாற்றப்பட்டுள்ள 12 பேரையும் காவல் துறையினர் இன்று ஆந்திர மாநிலம் சித்தூரில் மாவட்ட நீதிமன்றத்தில், மாவட்ட கூடுதல் நீதிபதி சிங்கராச்சாரி முன்பு பலத்த பாதுகாப்புடன் ஆஜர்படுத்தினர். இவ்வழக்கின் விசாரணையை நீதிபதி வரும் பிப்ரவரி 4 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.
தா. கிருட்டிணன் படுகொலை தொடர்பான அனைத்து ஆவணங்களும் தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்க்கப்பட்டு நீதிமன்றத்தில் இன்று சமர்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் தேதி மதுரையில் உள்ள தனது வீட்டருகே கிருட்டிணன் படுகொலை செய்யப்பட்டார்.
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி நடைப்பெற்று வரும் நிலையில் இவ்வழக்கின் விசாரணை நேர்மையாகவும், நியாயமாகவும் நடைப்பெறும் வகையில் வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்று சாட்சி ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இவ்வழக்கு ஆந்திர பிரதேசத்துக்கு மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.