ஆளுனர் உரை குறித்து தமிழக அரசியல் கட்சியில் வரவேற்பும், எதிர்ப்பும் உள்ளது.
ஆளுனரின் உரை குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி : மாநிலத்திற்குள்பாயும் ஆறுகளை இணைக்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆரம்ப கட்டப் பணிகளை அரசு விரைந்து மேற்கொள்ளும் என்றும் ஆறுகள், சிற்றாறுகள், மற்றும் ஓடைகளில் தடுப்பணை அமைத்து வேளாண்மை மற்றும் குடிநீர் வசதிக்கு தகுந்த ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அறிவித்திருப்பது மிகுந்த பாராட்டுக்குரியது.
நாங்குநேரி மற்றும் கங்கை கொண்டான் சிறப்பு பொருளாதார மண்டல திட்டம் ரூ.9,757 கோடி செலவில் சென்னை மெட்ரோ ரெயில் திட்டம், மதுரவாயல்-சென்னை துறைமுகத்திற்கிடையில் வேக வழித் திட்டம் அமைவது. 240 சமத்துவபுரங்கள் அமைக்கப்படும் என்றும் அறிவித்திருப்பது பாராட்டத்தக்கது.
சிமெண்ட் விலையை மேலும் குறைத்து அனை வருக்கும் குறிப்பாக நலிந் தோருக்கு பயன்படும் வகையில் ஆளுநர் உரையில் அறிவிப்பு இடம்பெறவில்லை. தமிழகத்தில் தீவிரவாதம் அதிலும் விடுதலைப்புலிகள் நடமாட்டத்தை ஒழிக்க கடுமையாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து உரையில் தெரிவித்திருக்கலாம்.
பா.ம.க. சட்டப் பேரவை உறுப்பினர் ஜி.கே.மணி : மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப ஆளுனர் உரையில் புதிய திட்டங்கள் இல்லை. மெட்ரோ இரயில் திட்டம் உள்பட சில திட்டங்கள் வரவேற்கக் கூடியது. அறிவிக்கப்படாத மின் தடையால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகிறார் கள். இதற்கு உரிய தீர்வும் ஆளுனர் உரையில் இல்லை. ஏமாற்றம் அளிப்பதாகவே ஆளுனர் உரை உள்ளது.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் : ஆளுனர் உரையில் வறுமை ஒழிப்புக்கு எந்த திட்டமும் இல்லை. இதேபோல லஞ்ச, ஊழலை ஒழிக்கவும் அறிவிப்புகள் இல்லை. தீவிரவாதம் இருந்தால் அதனை ஒடுக்க அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தமிழக அரசு ஏற்கனவே பல தடவை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்புகளின் அறிக்கைகளைத் தொகுத்து, அதை ஒரு புத்தகமாக தயாரித்துள்ளனர். அதை ஆளுனர் படித்திருக்கிறார்.
படித்த இளைஞர்கள் 3 லட்சம் பேருக்கு உதவித் தொகை வழங்கப்படுவதாக ஆளுனர் உரையில் உள்ளது. அப்படி என்றால் 3 லட்சம் இளைஞர்களுக்கு வேலை கொடுக்க முடியவில்லை என்று தானே அர்த்தம். 22 விழுக்காடு வறுமையை ஒழித்து விட்டதாக ஆளுனர் உரையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு எந்தவித விளக்கமும் அளிக்கவில்லை. மொத்தத்தில் ஆளுனர் உரை வெறும் கண்துடைப்பே.
மார்க்சிஸ்ட் கட்சியின் சட்டமன்ற தலைவர் கோவிந்தசாமி : கடந்த ஆண்டுகளில் நிறைவேற்றப் பட்ட திட்டங்களின் விளக்கமாகத் தான் ஆளுனர் உரை இருக்கிறதே தவிர புதிய அறிவிப்புகள் பெரிதாக இல்லாமல் இருப்பது வருந்தத்தக்கது.
சேது சமுத்திரத்திட்டத்தை விரைவில் நிறைவேற்ற உறுதி பூண்டிருப்பதும், சென்னையில் மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்தவிருப்பதும், தென் மாவட்டங்களில் இரு வழி ரெயில் பாதை அமைக்கவிருப்பதும் வரவேற்கத்தக்கவை.
ரேஷன் கடைகளில் 2 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி கொடுப்பது போல பருப்பு, எண்ணை ஆகியவையும் முழு மையாக கிடைக்க வேண்டும் என்று கோவிந்தசாமி கூறினார்.
காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் : புதிதாக 95 சமத்துவபுரம் அமைக்கப்பட இருப்பதையும், மெட்ரோ இரயில் திட்டம் கொண்டு வரப்படுவதையும், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க உள்ளதையும் காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது. விடுதலைப்புலிகள் ஊடுருவலை காங்கிரஸ் கட்சி ஒரு போதும் ஏற்காது. ஆளுனர் உரை வறியவர்களை வளமாக்கும் உரையாக திகழ்கிறது.
ம.தி.மு.க. உறுப்பினர் கம்பம் ராமகிருஷ்ணன் : ஆளுனர் உரையில் யாருக்கும் பயன் இல்லை. அறிவிக்கப்படாத மின் வெட்டால் விவசாயிகள் வஞ்சிக்கப்படுகிறார்கள். இதற்கு தீர்வு காண எதுவும் சொல்லப்பட வில்லை.