குறைந்த வருவாய் ஈட்டும் குடும்பங்கள், நடுத்தர வகுப்பினருக்கு, நகர்ப்புறப் பகுதிகளில் வீட்டுவசதி அளிப்பதற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் பல்வேறு நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்களின் கீழ் ஒரு லட்சம் புதிய வீடுகள் கட்டப்பட உள்ளன என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகச் சட்டப் பேரவையில் இன்று ஆளுனர் நிகழ்த்திய உரையில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்கள் வருமாறு:
குறைந்த வருவாய் ஈட்டும் குடும்பங்கள், நடுத்தர வகுப்பினருக்கு, நகர்ப்புறப் பகுதிகளில் வீட்டுவசதி அளிப்பதற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், பல்வேறு நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்களின் கீழ், மாநிலத்தில் உள்ள நகரங்களில் ஒரு லட்சம் புதிய வீடுகள் கட்டப்பட உள்ளன. மாநகராட்சிப் பகுதிகளில் வாழும் மக்களின் வீட்டுவசதித் தேவையைக் கருத்தில் கொண்டு, பொதுத்துறை - தனியார்துறை கூட்டு முயற்சியின் வாயிலாக மாநகராட்சிகளுக்கு அருகில் உள்ள பகுதிகளில் வீட்டுவசதித் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
இது மட்டுமன்றி, வீட்டுவசதித் திட்டங்களில் குறிப்பிட்ட ஒரு பகுதியை குறைந்த வருவாயுடைய மக்களுக்காக ஒதுக்கவேண்டும் என்ற நிபந்தனையின்படி திட்டங்களைச் செயல்படுத்தும் கட்டட அமைப்பாளர்களுக்கு, அதிக தரைப்பரப்புக் குறியீட்டளவிற்கு அரசு அனுமதியளிக்கும்.
சென்னையின் நெரிசலைத் தீர்க்க திட்டம்!
சென்னை மாநகரம் தொடர்ந்து வேகமாக வளர்ந்து வருகின்றது. இப்பகுதியின் போக்குவரத்துப் பிரச்சினைகளுக்கு உடனடியான மற்றும் நிலையான தீர்வுகள் தேவைப்படுகின்றன. இந்த முக்கியப் பிரச்சினையைக் கருத்தில் கொண்டு, ரூ.9,757 கோடி செலவில் சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தைச் செயல்படுத்த அரசு முனைந்துள்ளது. இத்திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை டெல்லி மெட்ரோ இரயில் கழகத்தால் தயாரிக்கப்பட்டு, ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு வங்கியின் நிதியுதவி பெறுவதற்காக மத்திய அரசிற்கு அனுப்பப்பட்டு உள்ளது. இத்திட்டத்திற்கான ஆரம்பக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சென்னைத் துறைமுகத்திற்கான சாலை இணைப்பை மேம்படுத்துவதற்காக, ரூ.1,468 கோடி மதிப்பீட்டில் மதுரவாயலிலிருந்து சென்னைத்
துறைமுகத்திற்கு, உயர்த்தப்பட்ட வேக வழித்தடம் ஒன்றை அமைக்க மத்திய அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டு, அதற்கான ஆரம்பக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சென்னை மாநகரத்திற்குள் போக்குவரத்து நெரிசலைப் போக்கும் வகையில், வெளிநாடுகளில் பல நகரங்களில் உள்ளது போல மாநகரின்
முக்கியச் சாலைகளை இணைக்கும் அதிவேக வட்டச்சாலை ஒன்றை அமைக்கக் கருதப்பட்டுள்ளது. இதற்கான சாத்தியக் கூறு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
நமது நாட்டிலேயே மிக அதிகமாக நகரமயமாக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடாகும். எனவே, நகரங்களில் சாலைகள், குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டால் மட்டுமே, மாநிலத்தின் பெரும் பகுதி மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும். இந்த நோக்கோடு, ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டம் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் ஆகியவற்றின் கீழ், முன்னர் எப்போதும் இருந்திராத வகையில், சுமார் ரூபாய் 6,700 கோடி அளவில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப் பணிகள்
முடுக்கி விடப்படும்.
தமிழகம் முழுவதும் ‘சென்னை சங்கமம்’
நமது தொன்மையான கலைகளை வாழவைக்கும் அரும்பணியாக; நாட்டுப்புறக் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களின்
ஆர்வத்திற்கு ஆதரவு நல்கிடும் வகையிலும், சென்னையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக, தமிழ் மையம் - ‘சென்னை
சங்கமம்’ கலைவிழா, மாநகர் முழுவதும் வெற்றிகரமாக நடைபெற்றதையொட்டி; வரும் ஆண்டுகளிலும் படிப்படியாக தமிழகம் முழுவதும் இவ்விழாவை நடத்துவதற்கு அரசு ஒத்துழைப்பு வழங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.