நமது நாட்டின் பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகம் அமைதி தவழும் மாநிலமாக விளங்கி வருகிறது என்று ஆளுனர் சுர்ஜித் சிங் பர்னாலா பெருமிதம் தெரிவித்தார்.
தமிழக சட்டப் பேரவையில் இன்று அவர் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:
நமது நாட்டின் பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், தமிழ்நாடு அமைதி தவழும் மாநிலமாக விளங்கி வருகிறது. மாநிலத்தில் தீவிரவாத நடவடிக்கைகள் எவையும் நடைபெறாவண்ணம் அரசு தொடர்ந்து விழிப்புடன் கண்காணித்து வருகிறது. அண்டை மாநிலங்களிலிருந்து நமது மாநிலத்திற்குள் தீவிரவாதம் ஊடுருவதற்கான முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளன.
மேலும், குற்றச் செயல்களில் ஈடுபடும் கூலிப்படையினருக்கு எதிராக அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஏற்றத்தாழ்வற்ற சமுதாய வளர்ச்சி காண்பதும், வறுமையை ஒழிப்பதுமே சாதிப் பூசல்களுக்கும், தீவிரவாதத்திற்கும், நிரந்தரத் தீர்வுகளாகும் என்று அரசு உறுதியாக நம்புகிறது.
உண்மையான கூட்டாட்சி!
அறிஞர் அண்ணா வகுத்தளித்த மாநில சுயாட்சிக் கொள்கையின்படி, உண்மையான கூட்டாட்சித் தத்துவத்தை நிலைபெறச் செய்ய இந்த அரசு எப்போதுமே பாடுபட்டு வந்துள்ளது. 1969ஆம் ஆண்டில் கருணாநிதி முதலமைச்சராக முதன்முறையாக பொறுப்பேற்றபோது, மத்திய மாநில உறவுகள் பற்றி ஆய்ந்து பரிந்துரைக்க, நீதிபதி இராஜமன்னார் தலைமையில், டாக்டர் லட்சுமணசுவாமி முதலியார் மற்றும் நீதிபதி சந்திரா ரெட்டி ஆகியவர்களை உறுப்பினர்களாகக் கொண்ட, ஒரு குழு அமைக்கப்பட்டு அறிக்கை பெறப்பட்டது.
தற்போது, மத்திய- மாநில உறவுகள் குறித்து ஆராய, நீதிபதி மதன்மோகன் பூஞ்சி தலைமையில் மத்திய அரசு புதிய குழு ஒன்றை அமைத்துள்ளது குறித்து அரசு மகிச்சி தெரிவிக்கிறது. நமது நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, இறையாண்மை ஆகியவற்றைப் பேணிப் பாதுகாக்கும் அதே வேளையில், உண்மையான கூட்டாட்சி நடைமுறைப்படுத்தப்படத் தேவையான பரிந்துரைகளை இந்தக் குழு அளிக்கும் என எதிர்பார்க்கிறோம்.
சரியான நிதிப் பகிர்வு தேவை!
கடந்த ஆண்டுகளில், மத்திய அரசு அமைத்த நிதிக் குழுக்களின் பரிந்துரைகள் அனைத்தும் தமிழ்நாட்டிற்கு நிறைவளிப்பதாக அமையவில்லை. தமிழ்நாடு போன்ற சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வு தொடர்ந்து குறைக்கப்பட்டு வந்துள்ளது. அண்மையில் அமைக்கப்பட்டுள்ள பதிமூன்றாவது நிதிக் குழு, இந்நிலையை மாற்றி, நமது மாநிலத்தின் சிறந்த செயல்பாடு மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கான தேவைகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு சரியான நிதிப் பகிர்வினை அளிக்கும் என நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.