அதிகரித்து வரும் விமானப் பயணத்தைக் கருத்தில் கொண்டு வேலூர், சேலத்தில் புதிய விமான நிலையங்களை அமைக்கும் திட்டத்திற்கு முன்னுரிமை அளிக்குமாறு மத்திய அரசைத் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாகச் சட்டப் பேரவையில் இன்று நிகழ்ந்த ஆளுநர் உரையில், "நமது மாநிலத்தில் விமானப் பயணம் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. எனவே, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை மற்றும் தூத்துக்குடி ஆகிய நகரங்களில் தற்போதுள்ள விமான நிலையங்களை விரிவாக்கி மேம்படுத்துவதோடு, வேலூர் மற்றும் சேலத்தில் புதிய விமான நிலையங்களை நிறுவ வேண்டியது
மிக்க அவசியமாகிறது. இந்த விமான நிலையங்களுக்கு உயர் முன்னுரிமை வழங்குமாறு மத்திய அரசை தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தும்." என்று கூறப்பட்டுள்ளது.
ஆளுநர் உரையில் மேலும் கூறப்பட்டுள்ள பல்வேறு அறிவிப்புகள் பற்றிய விவரம் வருமாறு:
"தமிழ்நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிவோரின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் வேகமாக உயர்ந்துள்ளது. இவர்களுக்கு ஏற்படும் இன்னல்களைக் களைய, முதலமைச்சர் தலைமையில் மாநில அளவிலான உயர்நிலை ஆலோசனைக் குழு ஒன்று அமைக்கப்படும்.
வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்!
மத்திய அரசின் மிகப் பெரும் சாதனைத் திட்டமான தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், தமிழகத்தில் தற்போது 10 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் இத்திட்டத்தின் செயல்பாட்டை சமூக ஆய்வு வாயிலாக ஆய்ந்துவரும் குழுவினர், தமிழகத்தில் இத்திட்டம் மிகச் சிறப்பாகச் செயல்படுத்தப்படுவதாகவும், இத்திட்டத்தின் கீழ் பணிபுரிவோருக்கு நாளொன்றுக்கு எண்பது ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டு வருவதாகவும், வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் தமிழகத்தில் இத்திட்டத்தின் கீழ் பெண்களே 82 விழுக்காடு வேலைவாய்ப்புப் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டு பாராட்டியுள்ளனர்.
இத்திட்டத்தை, மத்திய அரசு நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தியுள்ளதை யொட்டி, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வரும் நிதியாண்டு முதல் இத்திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்படும்.
2,500 ஏக்கரில் சிறப்புப் பொருளாதார மண்டலம்!
தென் மாவட்டங்களில் வாழும் மக்களுக்கு, சென்னை - மதுரை இரயில் பாதையே மிக முக்கியமான போக்குவரத்து இணைப்பாகும். விழுப்புரம் - திண்டுக்கல் இடையிலான அகலப்பாதையை இரு வழித்தடமாக மாற்றினால் மட்டுமே தென் மாவட்டங்களுக்கு கூடுதல் இரயில்களை இயக்க முடியும். எனவே, தென் மாவட்ட மக்களின் நலன் கருதியும், இம்மாவட்டங்களின் தொழில் வளர்ச்சிக்கு வழிகோலும் வகையிலும் இந்த இருவழித்தடத் திட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்குமாறு மத்திய அரசையும் மத்தியத் திட்டக் குழுவையும் அரசு வலியுறுத்துகிறது.
நாங்குநேரியில் சிறப்புப் பொருளாதாரப் பகுதி அமைப்பதற்கு குறுக்கிட்ட தடைகள் நீக்கப்பட்டுள்ள நிலையில், 2,500 ஏக்கர் பரப்பளவில் பல்தொழில் சிறப்புப் பொருளாதார மண்டலம் ஒன்று விரைவில் அமைக்கப்படும். இதேபோல கங்கைகொண்டானில் தகவல் தொழில்நுட்ப சிறப்புப் பொருளாதார மண்டலம் ஒன்றை ஏற்படுத்தவும் மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களை அமைக்கவும் எல்காட் நிறுவனம் நடவடிக்கை எடுத்துவருகிறது.
அண்மையில், கங்கைகொண்டான் மற்றும் மதுரையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டங்களில் உள்ள படித்த வேலையற்ற இளைஞர்கள் பெருமளவில் வேலைவாய்ப்புப் பெறவும், இப்பகுதிகள் பொருளாதார வளர்ச்சி அடையவும் இந்த நடவடிக்கைகள் பெரிதும் உதவும்.
பொது சுத்திகரிப்பு நிலையம்!
ஆறுகள் மற்றும் நீர்நிலைகள் மாசுபடா வண்ணம் தடுக்க, கழிவுநீரை முற்றிலும் மாசற்றதாக சுத்தி கரிக்கும் பொது சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்க மத்திய அரசு நிதியுதவி வழங்க வேண்டும் என்று தோல் மற்றும் சாயத் தொழிற்சாலைகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. இவற்றுக்கான நிதியுதவியை விரைவில் வழங்குமாறு மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறோம். மாநில அரசும் உரிய நிதி உதவியை இத்திட்டத்திற்கு அளிக்கும்.
கனரக வாகன ஓட்டுநர் பயிற்சித் திட்டம்!
பொது அறிவு, கணினி அறிவு, ஆங்கிலத்தில் நன்றாகப் பேசும் திறன் மற்றும் நேர்முகத் தேர்வுகளில் பங்கேற்கும் திறன் ஆகியவற்றை இளைஞர்கள் பெற நடவடிக்கை எடுக்கப்படும். பயிற்சி பெற்ற கனரக வாகன ஓட்டுநர்கள் அதிக அளவில் தேவைப்படுவதைக் கருத்தில் கொண்டு, அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் பெருமளவில் கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி அளிப்பதற்கான திட்டத்தை அரசு செயல்படுத்தும்." என்று அதில் கூறப்பட்டுள்ளது.