'ஒரு வகையில் ஊனமுற்றோர் என்றே கருதப்படும் அரவாணிகளுக்கென்று புதிய நல வாரியம் அமைக்கப்படும்' என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகச் சட்டப் பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் இன்று தொடங்கியது. இக்கூட்டத்தில் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா நிகழ்த்திய உரையின் விவரம் வருமாறு:
ஒரு வகையில் ஊனமுற்றோர் என்றே கருதப்பட்டு, சமுதாயத்தின் ஓரத்தில் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள அரவாணிகளின் நலனில் எப்பொழுதுமே அரசு அக்கறை கொண்டுள்ளது. சமூக அங்கீகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை இவர்கள் எதிர்கொள்வதைக் கருத்தில் கொண்டு, குடும்ப அட்டைகளை வழங்குதல், அரசு மருத்துவமனைகளில் இலவச அறுவை சிகிச்சை அளித்தல் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரவாணிகளின் மீது உள்ள பரிவின் காரணமாக இவர்களுக்கென புதிய நல வாரியம் ஒன்று அமைக்கப்படும்.
ஊனமுற்றோர் நலனுக்கு முன்னுரிமை!
ஊனமுற்றோருக்கு வழங்கப்படும் உதவித் தொகை ரூ.200-லிருந்து ரூ.400-ஆகவும், கடும் ஊனமுற்றோருக்கு வழங்கப்படும் உதவித் தொகை ரூ.200-லிருந்து ரூ.500-ஆகவும் கடந்த ஆண்டு உயர்த்தப்பட்டது.
தங்களைத் தாங்களே பராமரித்துக் கொள்ளக்கூட இயலாத மன வளர்ச்சி குன்றியோருக்கு, முன் எப்போதும் இல்லாத வகையில், வருமான வரம்பு மற்றும் எண்ணிக்கை வரையறையின்றி, மாதாந்திர உதவித் தொகையாக ரூ.500 வழங்க ஆணையிடப்பட்டது. இதன் அடிப்படையில், இதுவரை 30,000 பேருக்கு இத்தொகை வழங்கப்பட்டுள்ளதோடு, இவர்களுக்கு சிறப்புக் கல்வி மற்றும் தொழிற் பயிற்சி வசதிகளும் கிடைத்திட ஆவன செய்யப்பட்டுள்ளது.
இடைத் தரகர்கள் மீது நடவடிக்கை!
நமது நாட்டிலேயே, எங்கும் முன்னர் எப்போதும் வழங்கப்படாத அளவில், ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்குத் திருமணம் மற்றும் மகப்பேறு உதவிகள் தமிழகத்தில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கும்போது, அதில் குறுக்கே புகுந்து ஆதாயம் தேடும் நோக்கத்தோடு, சில இடைத்தரகர்களும் அலுவலர்களும் தவறான செயல்களில் ஈடுபட ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இத்தகைய கயவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்.
அமைப்பு சாராத் தொழிலாளர்களின் நலனுக்கு தொடர்ந்து முன்னுரிமை அளிக்கப்படுகிறது. 1996-2001 ஆண்டு காலத்தில், தி.மு.க. அரசுதான் அமைப்பு சாராத் தொழிலாளர் நல வாரியங்களை அமைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கியது. இடையில் கலைக்கப்பட்ட இந்த வாரியங்கள் தற்போது மீண்டும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வாரியங்களின் மூலமாக கடந்த ஒன்றரை ஆண்டு காலத்தில், 2,20,043 அமைப்பு சாராத் தொழிலாளர்கள் சுமார் ரூ.56 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு நலத் திட்ட உதவிகளைப் பெற்றுள்ளனர்.