''தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயல்படும் தி.மு.க. அரசை உடனடியாக கலைக்க வேண்டும்'' என்று வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் ஆளுனர் உரையை புறக்கணித்து அ.இ.அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தனர்.
தமிழக சட்டப் பேரவையின் இந்தாண்டின் முதல் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு துவங்கியது. முதல் நிகழ்ச்சியாக ஆளுனர் சுர்ஜித் சிங் பர்னாலா உரை இடம் பெற்றது.
ஆனால் அதற்கு முன்னதாகவே எழுந்த சட்டப் பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர் செல்வம் (அ.இ.அ.தி.மு.க.), அரசுக்கு எதிரான அறிக்கை ஒன்றை வாசித்தார்.
அதில், இலங்கையில் சிறிலங்கா விமான படைத் தாக்குதலில் கொல்லப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்செல்வன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தமிழக முதல்வர் கருணாநிதி எழுதிய இரங்கல் கவிதையை விமர்சித்ததுடன், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டதாகவும் குற்றம்சாற்றினார்.
தடை செய்யப்பட்ட இயக்கத்தின் தலைவருக்கு இரங்கல் தெரிவித்ததன் மூலம் அரசியல் சட்டத்தை தமிழக முதல்வர் அவமதித்து விட்டதாக குற்றம்சாற்றிய பன்னீர் செல்வம், நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்ட முதல்வர் கருணாநிதியின் அரசை உடனடியாக கலைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும், ஜெயலலிதா தலைமையிலான கடந்த அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் அமைதிப் பூங்காவாக திகழ்ந்த தமிழகம் தற்போது பயங்கரவாத நடவடிக்கைகளின் புகழிடமாக மாறிவிட்டது என்றும், அண்மையில் நடந்த சில நிகழ்வுகள் மூலம் தமிழகத்தில் விடுதலைப்புலிகள் ஊடுருவி உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், தமிழகம் ஆயுத கிடங்காக மாறிவருவதாகவும் பன்னீர் செல்வம் குற்றம் சாற்றினார்.
இறுதியில் தி.மு.க. அரசை கலைக்கக் கோரி முழக்கமிட்டபடி அ.இ.அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தனர்.