விடுதலைப்புலிகள் தமிழ்நாட்டில் பரவலாக ஊடுருவ ஆரம்பித்து விட்டனர். இதன் காரணமாக அமைதிப் பூங்காவாக இருந்த தமிழகம் ஆயுதக் காடாக மாறி விடுமோ என்கிற கவலையில் தமிழக மக்கள் ஆழ்ந்திருக்கிறார்கள் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
இது குறித்து அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கருணாநிதி ஆட்சியில் ரவுடிகளும், தீவிரவாதிகளும் தான் பாதுகாப்பாக உள்ளனர். பொதுமக்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலையே நிலவுகிறது. தற்போதைய தி.மு.க. ஆட்சியில் சட்டம், ஒழுங்கு மோசமான நிலைக்கு சென்றுவிட்டது. விடுதலைப்புலிகளின் ஊடுருவல் காரணமாக அவர்களுக்குத் தேவையான ஆயுத தளவாடங்களையும், உணவு பொருட்களையும், கள்ளத்தோணி மூலம் மீண்டும் இலங்கைக்கு கடத்தி செல்கிற செயல்கள் சர்வ சாதாரணமாக தமிழ்நாட்டில் நிகழ்ந்து வருகின்றன.
தற்போது கூட இலங்கைத் தமிழ் மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாளை கொல்ல திட்டமிட்ட சதிச் செயல்களில் ஈடுபட்ட 7 விடுதலைப்புலிகளை கைது செய்துள்ளனர்.
உலகத்தில் இயங்கி வருகிற பல்வேறு பயங்கரவாத இயக்கங்களில் மிகக் கொடூரமான, ஆபத்தான தீவிரவாத இயக்கம் விடுதலைப்புலிகள் இயக்கம்தான் என்றும், இந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டிற்குள் ஊடுருவி இருப்பதாகவும் அமெரிக்க உளவுப் பிரிவு எச்சரித்துள்ளது.
விடுதலைப்புலிகள் தமிழ்நாட்டில் பரவலாக ஊடுருவ ஆரம்பித்து விட்டனர். இதன் காரணமாக அமைதிப் பூங்காவாக இருந்த தமிழகம் ஆயுதக்காடாக மாறி விடுமோ என்கிற கவலையில் தமிழக மக்கள் ஆழ்ந்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் கருணாநிதியே முழு பொறுப்பேற்க வேண்டும். அவரது தீவிரவாத ஆதரவு போக்கினால் தமிழ்நாட்டு மக்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, தி.மு.க. அரசின் மக்கள் விரோத, தீவிரவாத ஆதரவு நிலையை கருத்தில் கொண்டு இந்த அரசை மத்திய அரசு உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.