''தமிழகத்தில் கோழிக் காய்ச்சல் இல்லை, கோழிக்கறி, முட்டைகளை மக்கள் துணிச்சலாக சாப்பிடலாம்'' சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் செய்தியாளர்களிடம் கூறுகையில், கோழிக் காய்ச்சலை 'இன்புளுன்சா' என்ற வைரஸ் ஏற்படுத்துகிறது. நீர்பறவையின் உமிழ்நீர், மலம் போன்றவற்றால் இந்த நோய் பரவுகிறது. கோழிகளை தாக்கும் இந்த நோய் மனிதனுக்கு பரவ வாய்ப்பு உண்டு.
தமிழ் நாட்டில் கோழிக் காய்ச்சல் இல்லை. நோய் பரவாமல் தடுக்க 29 மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் கோழிப் பண்ணைகள் தொழிலாளர்கள் அவர்கள் குடும்பத்தினருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. மனிதருக்கு பாதிப்பை ஏற்படுத்தவதாக இருந்தால் வைரஸ் காய்ச்சலுக்கு உள்ள அறிகுறிகள் காணப்படும். காய்ச்சல், இருமல், மூச்சு வாங்குதல் போன்ற அறிகுறிகள் ஏற்படும்.
தமிழகத்தில் கோழிக் காய்ச்சலால் மனிதர்களுக்கோ, கோழிகளுக்கோ எந்தவித பாதிப்பும் இல்லை. அதனால் கோழிக்கறிகளை சமைத்து சாப்பிடலாம் பயப்படதேவையில்லை. கோழிக்கறியை நாம் சூடுபடுத்தி பயன்படுத்துவதால் வெப்பத்தில் கிருமி செத்து விடும். அதனால் கோழிக்கறியை தாராளமாக சாப்பிடலாம். முட்டை ஆப்பாயில், ஆம்லெட் தயார் செய்து சாப்பிடாமல் அவித்து சாப்பிடலாம். அது ஒன்றும் செய்யாது. எனவே பொதுமக்கள் தயக்கமின்றி கோழிக்கறி, முட்டைகளை சாப்பிடலாம் என்று அமைச்சர் பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.