''மனித உயிர்களை துச்சமாக மதித்தவர் ஜெயலலிதா, இன்றைக்கு மாடுகளின் உயிர்களை மதித்து அறிக்கை விட்டிருப்பது வாயில்லா பிராணிகளிடம் அவர் காட்டும் வாஞ்சையை விளக்குகிறது'' என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில், ராமேஸ்வரம் கோயிலில் இறந்தவை பெரிய பசுமாடுகள் அல்ல. சிறிய கன்று குட்டிகள் தான் இறந்துள்ளன. இதுபோன்ற கன்றுக்குட்டிகளை வைத்து வளர்க்க முடியாமல் சிலர் கோயிலுக்கு நேர்ந்து விட்டுவிடுவதால், தாய்பால் இல்லாத நிலையில் அந்த கன்றுகள் இறந்துபோக நேரிடுகிறது என்று அமைச்சர் கூறியுள்ளார்.
அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் கோயிலுக்கு விடப்படும் மாடுகளையும், கன்றுகளையும் அடிக்கடி ஏலம் விட்டு அவற்றை கூட்டம் கூட்டாக லாரியில் ஏற்றி கேரளாவிற்கு கொண்டு சென்று இறைச்சிக்காக பயன்படுத்தப்பட்டது என்பதற்காக சிலர் நீதிமன்றத்திலேயே முறையிட்டு, அதற்கு 2001ஆம் ஆண்டிலும் 2004 ஆம் ஆண்டிலும் சென்னை உயர்நீதிமன்றம் தடையாணை பிறப்பித்து திருக்கோயில்களுக்கு வழங்கப்படும் மாடுகளை ஏலத்தில் விற்பனை செய்யக்கூடாது என்று கூறியது. அந்த ஆணையையும் அப்போதைய ஜெயலலிதா ஆட்சி முறைப்படி செயல்படுத்தாததை குறிப்பிட்டு உயர் நீதிமன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்தது. தற்போது ஆலயங்களில் விடப்படுகின்ற மாடுகளையும், கன்றுகளையும் பாதுகாக்க விரிவான ஏற்பாடுகளை இந்த அரசு செய்து வருகிறது.
ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் திருச்செந்தூரில் கோயில் மாடுகள் மட்டுமல்ல; எம்.ஜி.ஆர் நகரில் வெள்ள நிவாரண உதவிகளை பெற்றிடச் சென்ற 50க்கும் மேற்பட்ட மனித உயிர்கள் பலியானதே, அப்போது ஜெயலலிதா பதவியை ராஜினாமா செய்யவில்லை. அதுமாத்திரமல்ல இவரும், இவருடைய உடன் பிறவா சகோதரியும் கும்பகோணம் மகாமகத்திற்கு சென்று இவர் குளிக்க அவர் நீரை ஊற்ற அவர் குளிக்க இவர் நீரை ஊற்ற ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக் கொண்ட கண்கொள்ளா காட்சியை காணத் துடித்த மக்கள் நெரிசலில் சிக்கி நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இறந்தார்கள்.
அவர்களுக்காக ஆட்சியை கலைத்திருந்தால் அந்த முன் உதாரணத்தை தற்போது பின்பற்றியிருக்கலாம். அப்போது மனித உயிர்களை துச்சமாக மதித்தவர், இன்றைக்கு மாடுகளின் உயிர்களை மதித்து அறிக்கை விட்டிருப்பது வாயில்லா பிராணிகளிடம் அவர் காட்டும் வாஞ்சையை விளக்குகிறது; வாழ்க அவரது வாஞ்சை என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.