சென்னையிலிருந்து லண்டனுக்கு இன்று காலை புறப்பட இருந்த விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள அண்ணா சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம், லண்டன் செல்ல தயாராக இருந்தது. அதில் செல்ல வேண்டிய 282 பயணிகளும் குடியுரிமை, பாதுகாப்பு சோதனைகளை முடித்து தயார் நிலையில் இருந்தனர்.
அப்போது, விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை அதன் பைலட் உரிய நேரத்தில் கண்டறிந்தார். இதையடுத்து விமானம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அதிருப்தி அடைந்தனர். தாங்கள் உடனடியாக புறப்பட வேண்டியதன் அவசியத்தை அதிகாரிகளிடம் வலியுறுத்தினர்.
இதையடுத்து அவசரமாகச் செல்லவிருந்த 40 பயணிகள் மட்டும் மும்பை வழியாக லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மற்ற பயணிகள் அனைவரும் சென்னையில் உள்ள ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர். விமானம் நாளை காலை புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.