மேற்கு வங்கத்தில் கோழிக் காய்ச்சலால் லட்சக்கணக்கான கோழிகள் பலியாயின. இதன் எதிரொலியாக தமிழகத்தில் கோழிக்கறி மற்றும் முட்டைகள் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளன. குறிப்பாக திருச்சி மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களில் இவற்றின் விலைகள் கடுமையாக குறைந்துள்ளது.
இது குறித்து திருச்சியை சேர்ந்த முட்டை வியாபாரி ஒருவர் கூறுகையில், வழக்கமாக ஒரு நாளைக்கு 300 முட்டைகள் விற்பனை ஆகும். ஆனால் கோழிக் காய்ச்சல் பீதியால் தற்போது 80 முதல் 90 முட்டைகள்தான் விற்பனை செய்யப்படுகிறது. 2 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை தற்போது ரூ.1.30 மற்றும் ரூ.1.20க்கு விற்பனை செய்யப்படுகிறது என்றார்.
கறிக்கோழி வியாபாரி ஒருவர் கூறுகையில், கோழிக் காய்ச்சல் பீதியால் 34 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட கோழிக்கறி, தற்போது 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையும் குறைந்து விட்டது. இவர்கள் தற்போது மீன், இறைச்சியை வாங்கி செல்கின்றனர்.
கோழிகள் உற்பத்தில் புகலிடமாக விளங்கும் நாமக்கல் மாவட்டம், கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. மேற்கு வங்கத்தில் ஏற்பட்டுள்ள கோழிக் காய்ச்சலால் துபாய், குவைத், ஓமன் ஆகிய நாடுகள் தடை விதித்துள்ளது.
மாவட்டத்தில் 750 கோழிப் பண்ணைகள் உள்ளது. இங்கு ஒரு நாளைக்கு 2.5 கோடிகள் உற்பத்தி செய்யப்படுகிறது. கோழிக் காய்ச்சலால் தற்போது 4 கோடி முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளது.
3 ஆண்டுக்கு முன் தமிழ்நாட்டில் கோழிக் காய்ச்சல் இல்லை என்று உலக நல அமைப்பு அறிவித்ததை போல் இப்போதும் அறிவிக்க வேண்டும் என்று கோழிப்பண்ணை ஏற்றுமதியாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், நாமக்கல் மண்டல தேசிய முட்டை உற்பத்தியாளர்கள் குழு, முட்டையின் விலையை ரூ.1.60 ல் இருந்து ரூ.1.20 ஆக குறைத்துள்ளது.