ஈரோடு மாவட்டம் தாளவாடியில் பாதிக்கப்பட்ட குட்டி யானையை சிகிச்சைக்காக தாய் யானையிடம் இருந்து மீட்க முதுமலையில் இருந்து இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளது. தாய் யானை தன் குட்டியை விடாமல் தொடர்ந்து போராடி வருகிறது.
ஈரோடு மாவட்டம் தாளவாடி வனப்பகுதியில் உள்ள மரியாபுரம் கிராமத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் நேற்று முன்தினம் சுமார் இரண்டு வயது மதிக்கதக்க ஆண்யானைக் குட்டி நடக்கமுடியாமல் விவசாய நிலத்தில் விழுந்துவிட்டது. இதை மீட்க மற்ற யானைகள் போராடி முடியாத காரணத்தால் மற்ற யானைகள் வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது.
ஆனால் தாய் யானை மட்டும் குட்டி அருகே நின்றுகொண்டு யாரையும் அருகே விடாமல் விரட்டியும் தன் குட்டியை தூக்கி, தூக்கி நிறுத்தியும் பாசபோராட்டத்தில் ஈடுபட்டு வந்தது. குட்டி யானையை மாவட்ட வனஅதிகாரி இராமசுப்பிரமணியம் மற்றும் டாக்டர் மனோகரன் ஆகியோர் சிகிச்சைக்காக அருகே சென்றனர். ஆனால் தாய் யானை இவர்களை விரட்டியடித்தது.
இதனால் முதுமலையில் இருந்து ஒரு கும்கியானை வரவழைக்கப்பட்டது. இதன் துணையுடன் குட்டியானைக்கு இரண்டு ஊசிகள் போடப்பட்டது. ஆனால் குட்டியானையை கொண்டுவர தாய்யானை விடவில்லை. கும்கியாலும் இந்த தாய் யானையினை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் மீண்டும் மற்றொறு கும்கி யானை முதுமலையில் இருந்து வரவழைக்கப்பட்டது.
நேற்று இரவு ஏழு மணியானதால் இந்த பகுதி இருள் சூழ்ந்தது. அந்த நேரத்தில் தாய் யானை பிளிரியது. இதைகேட்டு 500 மீட்டர் தூரத்தில் உள்ள வனப்பகுதியில் இருந்து மற்ற யானைகளும் பதிக்கு பிளிரியது. இதனால் மீட்புகுழுவிற்கு அச்சம் ஏற்பட்டது. மற்றயானைகள் கூட்டமாக வந்தால் இரண்டு கும்கிகளால் விரட்டமுடியாது. இரவு நேரம் என்பதால் பாதுகாப்பு இல்லை.
ஆகவே இன்று காலையில் இருந்து தாய் யானைக்கு கும்கிகள் உதவியால் மயக்க ஊசிபோட்டு குட்டியானையை சிகிச்சைக்காக கொண்டுவரும் நடவடிக்கை தொடர்ந்து நடந்து வருகிறது. சத்தியமங்கலம் மாவட்ட வனஅதிகாரி எஸ். இராமசுப்பிரமணியம் தலைமையில் பாதிக்கப்பட்ட குட்டி மற்றும் தாய் யானைக்கு அருகில் உள்ள விவசாய பூமியில் இருந்து கரும்பு மற்றும் தென்னங்கீற்று போன்ற உணவுகள் தொடர்ந்து அளித்து வருவதால் யானைகள் உடல் அளவில் சோர்வு இல்லாமல் காணப்படுகிறது.