ஆளுனர் உரையுடன் இந்த ஆண்டின் தமிழக சட்டப் பேரவையின் முதல் கூட்டம் நாளை துவங்குகிறது.
தமிழகத்தின் 11-வது சட்டப் பேரவையின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்றது. இந்த கூட்டத்தொடர் அக்டோபர் 17ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடந்தது.
இதைத் தொடர்ந்து 2008-ம் ஆண்டின் முதல் சட்டப் பேரவையின் 7-வது கூட்டத்தொடர் நாளை துவங்க ள்ளது. ஆளுனர் உரையுடன் நிகழ்ச்சி நிறைவு பெறும். முதல் நாள் கூட்டம் முடிந்த பிறகு, அலுவல் ஆய்வு குழு கூடுகிறது. மறுநாள் (24ஆம் தேதி) நடைபெறும் கூட்டத்தின் துவக்கத்தில் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் தனுஷ்கோடி தேவர், கே.வேலுசாமி, டி.கே.கபாலி ஆகியோர் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்படும்.
அதன்பின்னர் 2-வது நாள் கூட்டம் தொடர்ந்து நடக்கும். அப்போது ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை ஆளுங்கட்சி உறுப்பினர் ஒருவர் முன்மொழிவார். இந்த தீர்மானத்தின் மீது தினமும் விவாதம் நடக்கும். விவாதத்துக்கு பதில் அளித்து முதலமைச்சர் கருணாநிதி உரையாற்றுவார். முன்னதாக, முதல் நாள் கூட்டம் முடிந்ததும் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடக்கும். அதில், இந்த கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடத்துவது என்பது பற்றி முடிவு செய்யப்படும்.
இந்த கூட்டத்தொடரில், திருப்பூர், ஈரோடு நகராட்சிகளுக்கு மாநகராட்சி அந்தஸ்து அளித்து வெளியான அவசர சட்டம், கூட்டுறவு சங்கங்கங்களின் பிரிவு அலுவலர்களின் (எஸ்.ஓ.) பதவிக்காலத்தை நீட்டித்து கடந்த நவம்பர் மாதத்தில் வெளியிடப்பட்ட அவசர சட்டம், உள்ளாட்சி தலைவர்கள் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கான விதிமுறைகளில் திருத்தம் செய்து வெளியிடப்பட்ட அவசர சட்டம் ஆகியவற்றுக்கான மாற்று சட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன.
இதுதவிர இன்னும் சில சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட உள்ள நலத்திட்டங்கள் கவர்னர் உரையில் இடம்பெறும் என கூறப்படுகிறது.