தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கு: மூவரின் தூக்குத் தண்டனை நிறுத்திவைப்பு
, வெள்ளி, 18 ஜனவரி 2008 (16:42 IST)
தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் தூக்குத் தண்டணை விதிக்கப்பட்ட 3 அ.இ.அ.தி.மு.க. வினரின் தண்டனையை நிறுத்திவைக்கவும், இது தொடர்பாக தமிழக அரசுக்கு தாக்கீது அனுப்பவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2000 ஆவது ஆண்டு பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி அப்போதைய முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு, ஒரு குற்ற வழக்கில் வழங்கப்பட்ட தண்டணையை எதிர்த்து தர்மபுரி மாவட்டத்தில் 2000 க்கும் அதிகமான அ.தி.மு.க. வினர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த நேரத்தில் கோவை வேளாண்மைப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த 47 மாணவ - மாணவிகளும், இரண்டு ஆசிரியர்களும் கல்விச் சுற்றுலா சென்று விட்டு கோவை திரும்பிக் கொண்டிருந்தனர்.
இந்த கலவரத்தின் போது மாணவ - மாணவிகள் வந்த பேருந்துக்கு சிலர் தீ வைத்ததால், அதில் பேருந்துக்குள் சிக்கிக் கொண்ட கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா ஆகிய மாணவிகள் வெளியே வர முடியாமல் தீயில் கருகி உயிரிழந்தனர். இவ்வழக்கை விசாரித்த சேலம் விரைவு நீதிமன்றம் கடந்த ஆண்டு பிப்ரவரி 16 ஆம் தேதி 3 பேருக்கு தூக்குத் தண்டனையும், மற்ற 25 பேருக்கு சிறைத் தண்டனைகளும் வழங்கி தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் கடந்த ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி கீழ் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நீதிபதிகள் உறுதி செய்தனர்.
இதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.பி. நவ்லேக்கர், லோக்கேஷ்வர் சிங் பாண்டா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர்கள் நெடுஞ்செழியன், இரவீந்திரன், சி.முனியப்பன் ஆகியோரின் தூக்குத் தண்டணையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டதுடன், இது தொடர்பாக தமிழக அரசுக்கு தாக்கீது அனுப்பவும் உத்தரவிட்டுள்ளனர்.