சென்னையில் உள்ள பொழுது போக்கு பூங்காவில் படகு சவாரி செய்த போது இரண்டு படகுகள் மோதி விபத்துக்குள்ளானதில் 11 வயது சிறுமி தண்ணீரில் மூழ்கி பலியானாள். இது தொடர்பாக அங்குள்ள ஊழியர்கள் 7 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
பொங்கல் பண்டிகையையொட்டி பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் குயின்ஸ்லேண்ட் பொழுது போக்கு பூங்காவிற்கு மேடவாக்கத்தை சேர்ந்த ராஜ், தனது மனைவி ஸ்டெல்லா, மகள்கள் துனிசா (15), அனுசுயா (11) ஆகியோருடன் நேற்று வந்தனர். ராஜு, மனைவி குழந்தைகளுடன் அங்குள்ள ஏரியில் படகு சவாரி செய்தனர். இந்த படகில் இவர்களுடன் சேர்த்து மொத்தம் 10 பேர் சவாரி சென்றனர். குடும்பத்தினர் சென்ற படகு சவாரி முடிந்து கரைக்கு திரும்பியது. அப்போது கரையில் இருந்து ஆட்களை ஏற்றிக்கொண்டு இன்னொரு படகு புறப்பட்டது.
இந்த நேரத்தில் 2 படகுகளும் எதிர்பாராதவிதமாக மோதிக் கொண்டன. இதில் கரைக்கு திரும்பிய படகு தலைகுப்புற கவிழ்ந்தது. இதனால் படகில் இருந்த அனைவரும் தண்ணீரில் மூழ்கி தத்தளித்த நிலையில் கூச்சல் போட்டனர். இதையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தண்ணீரில் மூழ்கிய 10 பேர்களும் மீட்டனர். இதில் அனுசுயா மட்டும் மயங்கி நிலையில் உயிருக்கு போராடினாள். அவளை அருகில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு அனுசுயா பரிதாபமாக இறந்தாள்.
இது குறித்து நசரத்பேட்டை ஆய்வாளர் ரியாசுதீன், உதவி ஆய்வாளர் கிரி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் படகு ஓட்டுனர்கள் ஜெகநாதன் (34), முனுசாமி (38), உதவியாளர் ஆனந்த் (19), செல்வம் (19), பொழுது பூங்கா மேலாளர்கள் மணிகண்டன் (38), சோமசுந்தரம் (62), துணை பொது மேலாளர் ஷிபான்பான் (50) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.