எம்.ஜி.ஆரின் 91வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அ.இ.அ.தி.மு.க. நிறுவனத் தலைவரும் மறைந்த முதல்வருமான எம்.ஜி.ஆரின் 91வது பிறந்தநாளையொட்டி இன்று ராயப்பேட்டை அவ்வைசண்முகம் சாலையிலுள்ள அ.இ.அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா, அங்கு அமைந்துள்ள எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சென்னை கிண்டி எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் பரிதிஇளம் வழுதி, பூங்கோதை, மேயர் மா. சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்தியச் செயலாளர் திருநாவுக்கரசர், தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தில் உள்ள எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சென்னை கோயம்பேட்டு கட்சி தலைமையகத்தில் உள்ள எம்.ஜி.ஆரின் உருவச்சிலைக்கு அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், செயலாளர் பார்த்தசாரதி, துணைச் செயலாளர் ஆஸ்டின், தொழிற்சங்க பேரவைத் தலைவர் வேல்முருகன் உள்பட பலர் மாலை அணித்து மரியாதை செலுத்தினர்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் கொட்டிவாக்கத்தில் உள்ள நடிகரும், கட்சித் தலைவருமான சரத்குமார் இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
எம்.ஜி.ஆர் கழகம் சார்பில் அதன் தலைவர் ஆர்.எம்.வீரப்பன், தி.நகர் எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஜனநாயக முற்போக்கு கழக தலைவர் ஜெகத்ரட்சகன் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.