பலத்த பாதுகாப்புக்கிடையில் உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று துவங்கியது. சீறி வரும் காளையை ஏராளமான இளைஞர்கள் பாய்ந்து அடக்கினர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சீறிப்பாயும் காளைகளை இளைஞர்கள் வீரத்துடன் அடக்கும் ஜல்லிக்கட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது. ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுகள் துன்புறுத்தப்படுவதாகவும், மாடு பிடிக்கும் வீரர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களும் மாடுகளால் தாக்கப்பட்டு காயமடைவதுடன் உயிரிழக்கும் அபாயமும் ஏற்படுவதால் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.
ஆனால் தென் தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களில் மக்கள் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு ஒன்றை தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியது.
மாவட்ட ஆட்சியர் ஜல்லிக்கட்டு போட்டி குறித்து மூன்று தினங்களுக்கு முன்பு தகவல் தெரிவிக்க வேண்டும். காளைகள் துன்புறுத்தப்படாமல் இருப்பதற்கு மாவட்ட நிர்வாகம் உறுதி அளிக்க வேண்டும். போட்டி முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட வேண்டும். பார்வையாளர்கள் காயமடைவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். பிராணிகள் நல வாரிய அதிகாரிகள் பார்வையிட அனுமதிக்கப்பட வேண்டும். போட்டி முடிந்து இரண்டு வாரங்களுக்குள் மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் ஆகிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து நேற்று கோலாகலத்துடன் பாலமேடு ஜல்லிக்கட்டு துவங்கியது. இதில் 40-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். போட்டியில் வெற்றி பெற்ற வாலிபர்கள், காளைகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. எந்த விதமான உயர்சேதமும் ஏற்படாமல் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி முடிந்தது.
இந்த நிலையில் உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று முற்பகல் 11.30 மணிக்கு துவங்கியது. பல்வேறு பகுதிகளிலிருந்தும் 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றுள்ளன. 500-க்கு மேற்பட்ட இளைஞர்களும் களத்தில் உள்ளனர். முன்னதாக அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. காளை உரிமையாளர்களிடம் கையெழுத்து வாங்கப்பட்டது.
முதலில் முனியாண்டி கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. பின்னர் ஒன்றன் பின் ஒன்றாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. சீறி வந்த காளைகளை இளைஞர்கள் பாய்ந்து அடக்கினர். வெற்றி பெறும் வாலிபர்கள், காளைகளுக்கு தங்கக் காசுகள் பரிசாக வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி பல்வேறு பரிசு வழங்கப்படுகிறது.
எங்கு பார்த்தாலும் ஒரே மக்கள் கூட்டமாக காணப்படுகிறது. பாதுகாப்பிற்கு ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.