மேற்கு வங்கத்தில் பறவை காய்ச்சல் நோய் கோழிகளை தாக்கியதை தொடர்ந்து, நாமக்கல் கோழிப்பண்ணைகளில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக உயிர் காப்பு முறைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரையில் நாமக்கல் மண்டலத்தில் 800-க்கும் மேற்பட்ட கோழிப் பண்ணைகள் உள்ளன. இங்கு இரண்டரை கோடிக்கும் அதிகமான முட்டை கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இங்கு நிலவும் சீதோஷ்ண நிலை பறவை காய்ச்சலை ஏற்படுத்தும், கிருமிகள் பரவ ஏதுவாக இல்லை என்பதால், பறவை காய்ச்சல் நோய் இங்கு பரவ வாய்ப்புகள் இல்லை என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இருப்பினும் மேற்கு வங்க மாநிலத்தில் பறவை காய்ச்சல் நோய் பரவி வருவதால், நாமக்கல் பகுதியில் உள்ள கோழிப் பண்ணையாளர்கள் தங்களது பண்ணைகளில் உயிர்பாதுகாப்பு முறையை தீவிரப்படுத்தி வருகின்றனர். அயல் மாநிலங்களில் இருந்து தீவன பொருட்களை ஏற்றி வரும் வாகனங்களை நன்கு மருந்து தெளித்து, சுத்தம் செய்த பின்னரே கோழிப்பண்ணைக்குள் அனுமதிக்கின்றனர்.
இதுகுறித்து கால்நடை பராமரிப்பு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், நாமக்கல் மண்டலத்தில் பறவை காய்ச்சல் பரவுவதற்கான அறிகுறிகள் இல்லை. இருப்பினும் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இதையொட்டி பண்ணைகளில் தடுப்பு மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. மாதம் ஒரு முறை 50 கோழிகளின் ரத்தமாதிரிகள் எடுத்து போபால் அனுப்பப்பட்டு வருகிறது. இதுதவிர நோய் கண்காணிப்பு குழுவும் தீவிரமாக பண்ணைகளை கண்காணித்து வருகிறது. அனைத்து பண்ணைகளிலும் தவறாமல் உயிர் பாதுகாப்பு முறையை பின்பற்ற அறிவுறுத்தி வருகிறோம் என்றார்.
இதுகுறித்து கோழிப்பண்ணையாளர் ஒருவர் கூறுகையில், கடந்த ஆகஸ்டு மாதம் பறவைக்காய்ச்சல் நோய்பீதி காரணமாக வெளிநாடுகள் இந்திய முட்டைக்கு தடை விதித்தன. இதனால் கோழிப் பண்ணையாளர்களுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டது. தற்போது தடைகள் நீக்கப்பட்டு உள்ளது. ஏற்றுமதியும் அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் மீண்டும் பறவை காய்ச்சல் பீதி ஏற்பட்டு உள்ளதால், வெளிநாடுகள் இந்திய முட்டைகளுக்கு தடை விதிக்க கூடும் என்ற அச்சம் உள்ளது என்றார்.