தமிழகத்தில் பல இடங்களில் நடந்த ஜல்லிகட்டில் காளைகள் முட்டியதால் சுமார் 200 பேர் காயம் அடைந்தனர்.
உச்ச நீதிமன்ற நிபந்தனை காரணமாக பலத்த பாதுகாப்புடன் மதுரை அருகே பாலமேட்டில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில், காளைகள் முட்டி 84 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மதுரை, திருச்சி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, புதுக்கோட்டை, கோவை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 400-க்கும் மேற்பட்ட காளைகள் ஜல்லிக்கட்டில் பங்கேற்றன. 350-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டனர்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாடுகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் தங்கக் காசு, அண்டா, சைக்கிள், வேட்டி, துண்டுகள், பிளாஸ்டிக் நாற்காலி, கடிகாரம் ஆகியன பரிசாக வழங்கப்பட்டன. மதுரை உள்பட அயல் மாவட்டங்களில் இருந்தும், அயல் நாடுகளலிருந்தும் ஏராளமானோர் ஜல்லிக்கட்டை பார்க்க வந்திருந்தனர்.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டது. இதில் 25 பேர் காயம் அடைந்தனர். முன்னதாக கோயில் மாடுகள் அவிழ்த்து விடப்பட்டன. பின்னர் கட்டு மாடுகளும் வெளியே விடப்பட்டன. இதில் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து மாடு பிடி வீரர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டி போட்டியில் கலந்து கொள்ள தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 200-க்கும் மேற்பட்ட காளைகள் வந்திருந்தன. இதில் 40 பேர் காயம் அடைந்தனர்.
திருச்சி அருகே சூரியூரில் நடந்த ஜல்லிக்கட்டி போட்டியில் பங்கேற்க கூத்தப்பார், நடராஜபுரம், அரசங்குடி, இலந்தைப்பட்டி போன்ற இடங்களில் இருந்தும் தஞ்சை மாவட்டத்தின் சில இடங்களில் இருந்தும் 250 க்கும் மேற்பட்ட காளைகள் பட்டியிலிருந்து அவிழ்த்துவிடப்பட்டன. சில காளைகள் கூட்டத்தில் புகுந்து ஆட்களை முட்டித் தள்ளின. இதில் 49 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது