நாளை காணும் பொங்கலையொட்டி சென்னையில் 5,000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடலில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று மக்கள் தங்கள் வீடுகளில் பொங்கல் படைத்து புத்தாடை அணிந்து உறவினர்களோடு பண்டிகையை கொண்டாடினர். இன்று மாட்டுப்பொங்கல் கொண்டாடப்பட்டது. நாளை காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
காணும் பொங்கலையொட்டி சென்னை மற்றும் புறநகர்ப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் குடும்பத்தோடு பல்வேறு இடங்களை சுற்றிப்பார்ப்பது வழக்கம். இதனால் ஏராளமான கூட்டம் கூடும் என்பதால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுற்றுலாப் பொருட்காட்சி, காந்தி மண்டபம், கிண்டி சிறுவர் பூங்கா, வள்ளுவர் கோட்டம், வண்டலூர் உயிரியியல் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தளங்களில் ஏராளமான காவலர்கள் குவிக்கப் படுகின்றனர்.
எண்ணூர், திருவொற்றியூர், மெரினா, சாந்தோம், எலியட்ஸ் கடற்கரை உள்பட முக்கிய இடங்களில் குளிப்பதற்கு காவல்துறையினர் தடை விதித்துள்ளனர். மெரினா, எலியட்ஸ் கடற்கரை, மகாபலிபுரம் ஆகிய இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடல் அலையில் சிக்குபவர்களை மீட்பதற்காக தீயணைப்பு படையினரை கொண்ட மீட்புப்படையினர் தயார் நிலையில் நிறுத்தப்படுகின்றனர்.
சென்னையில் காணும் பொங்கலை முன்னிட்டு மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கான மக்கள் திரள்வார்கள். இதையொட்டி சென்னையில் மக்கள் திரளும் இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக 5 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
மெரினாவில் 1,500 காவலர்கள்
சென்னை சிந்தாதரிப்பேட்டையில் சிறார் மையம், காவல் நண்பர்கள் குழு சார்பாக பொங்கல் விழா நடைபெற்றது. இதில் நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் நாஞ்சில் குமரன் பரிசு வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், நாளை கொண்டாடப்படும் காணும் பொங்கல்யொட்டி சென்னை முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மெரினா கடற்கரையில் 1,500 காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி பெண்களிடம் கேலி, கிண்டல் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக மாறு வேடத்தில் பெண் காவல்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சங்கிலி பறிப்பு, வழிப்பறி கொள்ளையர்களை பிடிக்கவும் காவலர்கள் மாறு வேடத்தில் சுற்றுவார்கள் என்று காவல் ஆணையர் நாஞ்சில் குமரன் கூறினார்.