உச்ச நீதிமன்றம் தடை நீக்கியதைத் தொடர்ந்து உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நாளை நடைபெறுகிறது.
ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை உச்சநீதிமன்றம் நீக்கியதை தொடர்ந்து மதுரை பாலமேட்டில் இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டி உற்சாகமாக நடைபெற்றது. புகழ் பெற்ற அலங்காநல்லூரில் நாளை ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் மாடுகள் துன்புறுத்தப்படுவதாகவும், உயிரிழக்கும் அபாயமும் ஏற்படுவதால் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு தென் தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதை தொடர்ந்து தமிழக அரசு மேற் கொண்ட முயற்சி காரணமாக உச்ச நீதிமன்றம் நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கியது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பை அறிந்த மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் உள்ள மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். அலங்காநல்லூர் முனியாண்டி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
உலக பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நாளை நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக பல்வேறு பகுதிகளிலிருந்தும் 200க்கும் மேற்பட்ட காளைகள் அங்கு அழைத்து வரப்பட்டுள்ளன. திரும்பிய திசையெல்லாம் ஜல்லிக்கட்டு காளைகள் திரிகின்றன. ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.