எல்லோரும் எல்லாமும் பெற இணைந்து பாடுபடுவோம் என இத்திருநாளில் அனைவரும் சூளுரைப்போமாக! என்று முதல்வர் கருணாநிதி பொங்கல் வாழ்த்து கூறியுள்ளார்.
முதலமைச்சர் கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்து செய்தியில், தைத் திங்கள் முதல் நாள்! தமிழர் திருநாள்! பொங்கல் நன்னாள் என தமிழர் வாழும் இடங்களில் எல்லாம் எழுச்சியுடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடப்படுகிறது. உழைத்துப் பயன் விளைக்கும் உழவர் சமுதாயம் அறுவடை செய்த நெல்லை ஆக்கி உண்பதற்கு முன் உடன் உழைத்தவர்க்குப் பகிர்ந்து வழங்கி, விளைச்சலுக்குத் துணைபுரிந்த வான்மழைக்கும் கதிரவனுக்கும் கால்நடைகளுக்கும் நன்றிகூறி மகிழ்ந்து கொண்டாடும் பொன்னாள் பொங்கல் நன்னாள்!
இவ்வாண்டில் தமிழகத்தில் மழைவளம் பெருகி வேளாண் தொழிலுக்குப் பேருதவி புரிந்திடும் காவிரி ஆற்றின் மேட்டூர் அணை 8 முறை நிரம்பி நீர்வளம் செழித்து, விளைச்சல் மிகுந்து விவசாயிகள் மகிழ்ந்திட இயற்கையும் பேருதவி புரிந்துள்ளது. 7000 கோடி ரூபாய் அள வுக்கு விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்தும், கடந்த ஆண்டில் 6 லட்சத்து 31 ஆயிரத்து 283 விவசாயிகளுக்கு 1251 கோடி ரூபாய், இவ்வாண்டில் 1360 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 4 லட்சத்து 21 ஆயிரத்து 521 விவசாயிகளுக்கு 881 கோடியே 40 லட்ச ரூபாய் பயிர்க் கடன்கள் வழங்கியும், கரும்புக்கும், நெல்லுக்கும் கூடுதல் விலைகள் தந்தும், நிலமற்ற ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 995 ஏழை விவசாயத் தொழிலாளர்கள் - விவசாயிகள் குடும்பங்களுக்கு ஒரு இலட்சத்து 60 ஆயிரத்து 671 ஏக்கர் இலவச நிலம் வழங் கியும்,
விவசாயத் தொழிலாளர்கள்-விவசாயிகள் சமூகப் பாதுகாப்பு-நலத் திட்டத்தின்கீழ் 2 லட்சத்து 13 ஆயிரத்து 688 விவசாயக் குடும்பங்களுக்கு 107 கோடியே 94 லட்சத்து 31 ஆயிரத்து 949 ரூபாய் உதவித் தொகைகளாக வழங்கியும், வரலாறு காணாத வகையில் இந்த அரசும் விவசாயிகளை அரவணைத்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில் கொண்டாடப்படும் பொங்கல் திருநாளில் "உலகத்தார்க்கு ஆணி'' என அய்யன் திருவள்ளுவர் புகழ்ந்து பாடிய உழவர் பெருங்குடி மக்களுக்கும், ஏனைய உழைப்பாளர்கள் உள்ளிட்ட தமிழக மக்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்து, எல்லோரும் எல்லாமும் பெற இணைந்து பாடுபடுவோம் என இத்திருநாளில் அனைவரும் சூளுரைப்போமாக! என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.