தமிழகம் முழுவதும் 5 லட்சத்து 22 ஆயிரம் மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் கருணாநிதி இன்று சென்னை தலைமை செயலகத்தில் இன்று துவக்கி வைத்தார்.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகள், அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள், பகுதியாக நிதியுதவி பெறும் பள்ளிகள் ஆகியவற்றில் 11 ஆம் வகுப்பில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், சிறுபான்மையினர், ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் இதர வகுப்புகளைச் சார்ந்த மாணவ, மாணவியர்களுக்கு நடப்பாண்டில் (2007-2008) இலவச மிதி வண்டிகள் வழங்குதல் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பள்ளிக் கல்வித்துறை ஆகிய துறைகள் மூலம் செயல்படுத்தப்படுகிறது.
மாணவ- மாணவியருக்கு வழங்கப்படும் மிதிவண்டிகள் அனைத்தும் தமிழ்நாடு திறந்தவெளி ஒப்பந்தப்புள்ளி சட்ட விதிகளைப் பின்பற்றிக் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. நடப்பு ஆண்டில் 112 கோடி ரூபாய் செலவில் 2 லட்சத்து 38 ஆயிரத்து 502 மாணவியரும், 2 லட்சத்து 84 ஆயிரத்து 297 மாணவர்களும் ஆக மொத்தம் 5 லட்சத்து 22 ஆயிரத்து 799 மாணவ, மாணவியர் இத்திட்டத்தில் பயனடைவர்.
இவர்களில் 2 லட்சத்து 22 ஆயிரத்து 562 பேர் பிற்படுத்தப்பட்டோர்; ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 924 பேர் மிகப்பிற்படுத்தப்பட்டோர். சீர்மரபினர் ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 174 பேர் ஆதி திராவிடர், பழங்குடியினர்; 12 ஆயிரத்து 139 பேர் இதர வகுப்பினர் ஆவர்; தமிழகம் முழுவதிலுமுள்ள 2,851 பள்ளிகளில் 11ஆம் வகுப்பில் பயிலும் இம்மாணவ, மாணவியர் அனைவருக்கும் வரும் பிப்ரவரி இறு திக்குள் சைக்கிள்கள் அனைத்தும் வழங்கிட ஆவன செய்யப்பட்டுள்ளது.
முதலமைச்சர் கருணாநிதி மாணவ-மாணவியருக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும் பணிகளை இன்று (14ஆம் தேதி) தலைமைச் செயலகத்தில் துவக்கி வைத்தார். மேலும், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் மதுரை, சிவகங்கை, கோவை ஆகிய மாவட்டங்களில் உள்ள சிறுபான்மைச் சமுதாயங்களைச் சேர்ந்த 209 இளைஞர்களுக்குக் குறைந்த வட்டி யுடன் கூடிய 2 கோடியே 21 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் கடனு தவியில் ஆட்டோக்கள் வழங்கும் பணிகளையும் இன்று முதலமைச்சர் கருணாநிதி தொடங்கி வைத்தார் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.