நாடாளுமன்றத்திற்கு முன் கூட்டியே தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை என்று குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடி கூறினார்.
சென்னைக்கு வருவதற்கு முன்பாக குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோயிலில் நரேந்திர மோடி வழிபாடு நடத்தினார். அதன் பின்னர் அவரை நிருபர்கள் சந்தித்தபோது மோடி கூறுகையில், குஜராத்திலும், இமாச்சல பிரதேசத்திலும் பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி உள்ளது. பாரதிய ஜனதாகட்சியின் இந்த வெற்றி காங்கிரசை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு அரசியல் சூழ்நிலை இப்போது சாதகமாக இல்லாததால் நாடாளுமன்றத்திற்கு தேர்தல் முன் கூட்டியே நடப்பதற்கு வாய்ப்பில்லை.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அரசியலில் ஆற்றிய நீண்ட கால சேவையை கருத்தில் கொண்டு அவருக்கு நாட்டின் மிக உயரிய விருதான "பாரத ரத்னா' விருது வழங்கப்பட வேண்டும்.
வளர்ச்சிக்கான சவால்களை சந்திக்க தோள் கொடுக்க மார்க்சிஸ்ட்டுகள் தயாராக இல்லை. ஆயினும் அவர்கள் அதிகாரத்தை அனுபவித்து வருகிறார்கள் என்று நரேந்திர மோடி கூறினார்.