ஜல்லிக்கட்டுக்கு தடையை நீக்கும்படி கோரி, தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. தடை உத்தரவை உச்ச நீதிமன்றம் நீக்குமா? என்பது நாளை தெரியும்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு உட்பட தென்மாவட்டங்களில் பொங்கல் பண்டிகையையொட்டி வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வந்தது. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இந்த தீர்ப்பால் அலங்காநல்லூர், பாலமேடு பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பொங்கலையொட்டி உற்சாகத்துடன் காணப்படும் அந்த ஊர்கள் தற்போது களையிழந்து இருக்கிறது. காணப்படுகின்றன. ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கப்பட்டதை ஆட்சேபித்து அப்பகுதி மக்களை கடைகளை அடைத்து உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினர். தென்மாவட்டங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த பிரச்சனையில் அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்களும் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதற்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளும்படி முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டார். அதன்படி, ஜல்லிக்கட்டுக்கு தடையை நீக்கும்படி உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய தமிழக அரசின் பொதுத்துறை செயலாளர் தேவஜோதி ஜெகராஜன் தலைமையில் உயர் அதிகாரிகள் குழுவினர் நேற்று டெல்லி சென்றனர். நேற்று விடுமுறை நாள் என்பதால், உச்ச நீதிமன்றம் பதிவாளர் வீட்டிற்கு சென்று, தமிழக அரசின் வழக்கறிஞர் வி.ஜி.பிரகாசம் நேற்று இரவு 7 மணிக்கு மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்தார்.
இந்த மனு நாளை (15ஆம் தேதி) தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது என்று தமிழக அரசின் வழக்கறிஞர் வி.ஜி.பிரகாசம் தெரிவித்தார். எனவே, ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் விதித்த தடை நீங்குமா? என்பது நாளை தெரிந்துவிடும்.