உலக புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிக்கு உச்ச நீதிமன்றம் தடை விதிதத்தை தொடர்ந்து அலங்காநல்லூர் பகுதியில் 3வது நாளாக உண்ணாவிரதம், போராட்டம் நடந்து வருகிறது.
உலக புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிக்கு உச்ச நீதிமன்றம் தடைவித்ததை கேள்விப்பட்டதும் அலங்காநல்லூர், பாலமேடு பகுதி மக்கள் தங்கள் கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் 3வது நாளாக கடைகளை போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கிராமங்கள் முழுவதும் கண்டன சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அலங்காநல்லூர் கிராம மக்கள் சார்பில் பழைய காவல் நிலையம் முன்பு நடந்த உண்ணாவிரதத்தில் திருமாவளவன், சேதுராமன் உள்பட பல்வேறு கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இன்று 3-வது நாளாக அலங்காநல்லூர் கிராம மக்கள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இந்த உண்ணாவிரத்தில் குமாரம், அதலை, பொதும்பு உள்பட 40-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டுள்ளனர். அலங்காநல்லூர் பகுதியில் கடைகள், வீடுகளில் பொதுமக்கள் கறுப்புக்கொடி ஏற்றி உள்ளனர். அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல அலங்காநல்லூர் அருகே உள்ள பாலமேடு பகுதியிலும் கிராம மக்கள் இன்று 3-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். உச்ச நீதிமன்றம் தடை விதித்திருந்தாலும் ஜல்லிக்கட்டை நடத்தியே தீருவோம் என அவனியாபுரம் கிராம மக்கள் தெரிவித்தனர்.
மதுரை அருகே மேலூர் யூனியனுக்குட்பட்ட நொண்டிக்கோவில்பட்டி உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் ஜல்லிக்கட்டு நடத்த கிராம மக்கள், மேலூர் காவல்துறையினர் அனுமதி வழங்காததால் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவோம் என்று கூறினர். எனினும் தீர்ப்புக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தங்களது வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றி உள்ளனர். மதுரை மாவட்டத்தில் சுமார் 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கறுப்புக்கொடி ஏற்றப்பட்டு உள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் 12 கிராமங்களில் காவர்களின் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தியே தீருவோம் என்று அறிவித்து உள்ளனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளதால் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.