Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம்: வைகோ வற்புறுத்தல்!

Advertiesment
ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம்: வைகோ வற்புறுத்தல்!
, திங்கள், 14 ஜனவரி 2008 (09:09 IST)
''ஜல்லிக்கட்டுக்காக அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும்'' என்று ம.‌தி.மு.க. பொது‌ச் செயலாள‌ர் வைகோ வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

இது கு‌றி‌த்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுக் கலையான ஜல்லிக்கட்டு 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் புறநானூற்றுக் காலத்தில் இருந்தே தொன்று தொட்டு நடைபெற்று வரும் தமிழர்களுக்கே உரிய வீரக்கலை ஆகும்.

தமிழர்களின் தேசிய திருவிழாவான தைப்பொங்கலை முன்னிட்டு நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கு உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் விதித்த தடை தமிழர்களை எல்லையற்ற வேதனைக்கு ஆளாக்கி உள்ளது. அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு என்றால், தமிழர்களின் வீரக்கலையைக் காண உலகத்து மக்கள் எல்லோரும் குவிகிறார்கள். ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்ததற்காக சொல்லப்படும் காரணங்கள் ஏற்க இயலாதவை.

தமிழகத்தில் நடைபெறுகின்ற ஜல்லிக்கட்டில், கலந்து கொள்ளும் காளைகள் ஆயுதங்களால் தாக்கப்படுவதில்லை. பங்கேற்கும் வீரர்கள் காயம் அடைவதும், சில வேளைகளில் சிலரின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதும், எந்த வீரப்போட்டியிலும் நடக்க கூடிய ஒன்று தான். மது விருந்து கேளிக்கைகளும், மேனாட்டுக் கலாசாரமும் தமிழர் பண்பாட்டை, நாகரீகத்தை, சிதைத்துச் சின்னாபின்னம் செய்து கொண்டு இருக்கின்ற இன்றைய சூழலில், தமிழர்களின் புராதனக் கலாசாரத்தை, பண்பாட்டை பறைசாற்றும் ஜல்லிக்கட்டு, தொடர்ந்து நடைபெற்றே ஆக வேண்டும்.

உ‌ச்ச ‌நீ‌‌திம‌ன்ற‌ம் முடிவை மறுஆய்வு செய்யும் நடவடிக்கையை முடுக்குவதோடு, ஜல்லிக்கட்டை நடத்தும் வகையில், அவசர சட்டத்தை உடனடியாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் எ‌ன்று வைகோ வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil