Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சம‌த்துவ‌ப் பொ‌ங்க‌ல் அனைவரு‌ம் கொ‌ண்டாடு‌வீ‌ர் : கருணாநிதி ‌வா‌ழ்‌த்து!

சம‌த்துவ‌ப் பொ‌ங்க‌ல் அனைவரு‌ம் கொ‌ண்டாடு‌வீ‌ர் : கருணாநிதி ‌வா‌ழ்‌த்து!
, சனி, 12 ஜனவரி 2008 (16:27 IST)
''பொங்கல் நாளன்று பொதுவிடங்களை அழகுபடுத்தி, அனைவரும் அங்கு கூடி வீடுகள்தோறும் புதுப்பானைகள் வைத்து, `சமத்துவப் பொங்கல்' கொண்டாடிடுவீர்'' எ‌‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருண‌ா‌நி‌தி பொ‌ங்க‌ல் வ‌ா‌ழ்‌த்து கூ‌றியு‌ள்ளா‌ர்.

முதலமைச்சர் கருணாநிதி இ‌ன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்ச் சமுதாயத்தின் தலைசிறந்த பண்பாட்டினை உலகுக்கு உணர்த்தும் வகையில் தைத் திங்கள் முதல்நாள் தமிழர் திருநாள் என ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. தமிழ்ச் சமுதாயம் கொண்டாடும் பொங்கல் விழா சாதி, மத, இன வேறுபாடு எதுவுமின்றி உழைப்பையும், உழைப்புக்கு உதவியவர்களையும் எண்ணி நன்றி தெரிவிக்கும் இனிய பண்பாட்டுத் திருவிழாவாக, மனித நேயம் வளர்க்கும் மகத்தான திரு விழாவாகத் தமிழர்கள் வாழும் இடங்களிலெல்லாம் கொண்டாடப்படுகிறது.

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என மாந்தர் ஒவ்வொருவரையும் நம் உடன் பிறந்தாராய்க் கருதும் உயரிய சிந்தனையை உலகுக்குத் தந்த தமிழினம் மனித சமுதாயத்திற்கே பொதுவான திருவிழாவாகக் கண்டுள்ள தனிப்பெரும் திருநாள் பொங்கல் திருநாள்! உழுது பயிரிட்டு விளைந்த நெல்மணிகளை வீடு சேர்த்த உழவன் அதன் பயனை நுகரும்பொழுது, "பகுத்துண்டு பல்லுயிர்ஓம்பும்'' தலையாய அறம் நிலைபெற நன்றியுரைத்துக் கொண்டாடும் நல்ல திருநாள் பொங்கல் திருநாள்!

வாழும் இல்லத்தைத் தூய்மைப்படுத்தி, வெள்ளையடித்து, வண்ணம் பூசி, மாக் கோலமிட்டு, புத்தாடையுடுத்தி, வீட்டு வாசலில் பொங்கலிட்டு உழவுத் தொழிலுக்குத் தேவையான வெப்பத்தையும், மழையையும் தந்துதவிய கதிரவனுக்கும், கார்மேகக் கூட் டங்களுக்கும் நன்றி தெரிவித்து வணங்கிப் பொங்கல் புதுநாளைக் கொண்டாடுகிறான் உழவன் உவகை பொங்கிட! இணை மயிலுடன் இளந்தளிர்களுடன்!

உறவினர் நண்பர்கள் சூழ ஒன்றுகூடி வீர விளையாட்டுகளில் திளைத்து, ஒருவரை ஒருவர் வாழ்த்திப் பாராட்டி, மகிழ்ந்து பொங்கல் விழாவில் நிறைவு காண்கிறது தமிழ்க்குலம்! இப்படி, உழவுத் தொழிலின் பயன் நுகரும் பொங்கல் விழாவை நன்றி உரைக்கும் நாகரிகத்தை உலகுக்கு நயமாக வெளிப்படுத்தும் உன்னதத் திருவிழாவாகக் கொண்டாடுகிறது தமிழ் நிலம்! அந்தப் பொங்கல் திருநாள் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் தனிச்சிறப்புடன் கொண்டாடப்பட வேண்டும் என விரும்பி கடந்த ஆண்டு தமிழக அரசு சார்பில் விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்று தமிழகத்தின் ஒவ்வொரு நகரிலும், ஊரிலும், குக்கிராமங்களிலும், ஒவ்வொரு வீட்டிலும் பொங்கல் திருவிழா மிகுந்த எழுச்சியோடு கொண்டாடப்பட்டதை இவ் வேளையில் மகிழ்ச்சியோடு நினைவு கூர்கிறேன்!

தமிழக அரசு அளித்த வாக்குறுதிகளையெல்லாம் தடையின்றி நிறைவேற்றி மக்கள் சமுதாயம் பயன்கண்டு வரும்வேளையில் - வானம் வரையாது வழங்கி - தமிழ் நிலம் முழுவதும் விளைச்சல் நிறைந்து உழவன் உள்ளத்தில் உவகை பொங்கிடும் வேளையில் - ஏழைப் பாட்டாளி மக்களின் இதயம் குளிர்ந்திடும் வேளையில் - தொழிலாளர் சமுதாயத் தோழர்களெல்லாம் கோரிக்கைகள் கைகூடிக் களித்திடும் வேளையில் 15.1.2008 அன்று இந்த ஆண்டின் பொங்கல் திருநாளையும் முந்தைய ஆண்டைவிட மிகுந்த மகிழ்ச்சியோடும் எழுச்சியோடும் கொண்டாடிட தமிழக அரசின் சார்பில் என் அருமை தமிழ் மக்களை அன்புடன் வேண்டுகிறேன்.

இந்த ஆண்டின் பொங்கல் விழா சிறப்பாக ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் சார்பில் மகளிர் சுயஉதவிக் குழுக்களின் மூலம் பொங்கல் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் ஒரு கோடியே 68 இலட்ச ரூபாயை சிறப்பு ஒதுக்கீடாக அனுமதித்து ஆங்காங்கே கலை நிகழ்ச்சிகளும் கலைப் போட்டிகளும் நடத்தி, மாவட்ட அளவில் பரிசுகள் வழங்கிச் சமத்துவப் பொங்கல் கொண்டாடிட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன என்பதனையும் இவ்வேளையில் மகிழ்ச்சியுடன் நினைவுபடுத்திட விரும்புகிறேன்.

இந்த சிறப்போடு இந்த ஆண்டின் பொங்கல் நாளை ஒவ்வொரு வீட்டிலும் வண்ணக்கோலங்களிடுவீர்; மாவிலைத் தோரணங்கள் அழகுற அமைத்திடுவீர்; ஊர்ப் பொதுவிடங்களில் தென்னை, வாழை, ஈச்சங்குலைகளும், தோகை விரிந்த கரும்புகளும், இஞ்சி, மஞ்சள் கொத்துகளும் இன்னபிறவும் கொண்டு அலங்கரித்திடுவீர்; பொங்கல் நாளன்று பொதுவிடங்களை அழகுபடுத்தி, அனைவரும் அங்கு கூடி வீடுகள்தோறும் புதுப்பானைகள் வைத்து, `சமத்துவப் பொங்கல்' கொண்டாடிடுவீர்; மகளிர், இளைஞர் திறம் விளங்கக் கோலப் போட்டிகளையும் வீர விளையாட்டுகளையும் ஆங்காங்கே நடத்திடுவீர்; கிராமப்புற நடனங்களும் இதர கலைநிகழ்ச்சிகளும் ஆங்காங்கே ஆவன செய்திடுவீர்.

இருபாலின இளைஞர்களையும், சிறுவர், சிறுமிகளையும் ஊக்கப்படுத்திடும் வகையில் விருதுகளும் பரிசுகளும் வழங்கிடுவீர்; வணிக நிலையங்களை - சாலைகளை -சோலைகளை வண்ண விளக்குகளால் ஒளி உமிழச் செய்திடுவீர்; கிராமப்புறங்களிலும், நகரங்களிலும், வீடுகள் தோறும், அரசுக் கட்டடங்கள் அனைத்திலும் பொங்கல் நாளன்று வண்ண வண்ண மாய்ச் சரவிளக்குகள் அமைத்து எழில் குலுங்கிடச் செய்திடுவீர்; தமிழகம் முழுவதும் தமிழ்ச் சமுதாயத்தின் தனிப்பெரும் பண்பாட்டைத் தரணிக்கு வெளிப்படுத்தும் `தமிழர் திருவிழா' மகிழ்ச்சியுடனும், எழுச்சியுடனும் தமிழகம் எங்கும் - ஒவ்வொரு பகுதியிலும் கொண்டாடப்பட ஊக்கமளித்து உதவிடுவீர்;

பொங்கல் விழா கொண்டாடும் வேளையில், புதிய உணர்வுகள் நம் உள்ளத்திலே ஊற்றெடுத்திட வேண்டும்! சாதி, மத, இன வேறுபாடுகளை அகற்றிடும் அன்பு உணர்வு தழைத்திட வேண்டும். குறிப்பாக அரசியல் கட்சி வேறுபாடுகளுக்கு சற்றும் இடம் கொடுத்திடாமல் இந்த பொங்கல் விழா இன உணர்வோடு அனைவரையும் இணைக்கும் அருங்கலை விழாவாக மலர வேண்டும்!

எனவே, ஒவ்வொரு பகுதியிலும் மகளிர் உட்பட உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள், உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், ஆசிரியப் பெருமக்கள், ஆங்காங்கே உள்ள அரசு அமைப்புகளின் பிரதிநிதிகள், சான்றோர்கள் பொதுமக்கள் என யாவரும் ஒருங்கிணைந்து இந்த ஆண்டின் பொங்கல் விழா விற்கு மேலும் பெருமை சேர்க்க அணிதிரள்வீர்! பொங்கல் திருநாளைக் கொண்டாடி - தமிழகம் எங்கும் மகிழ்ச்சி எழுந்தது - தமிழர் இதயமெல்லாம் இன்பம் செழித்தது! என்று ஊரும் உலகும் பேச ஒன்று பட்டுப் பொங்கல் விழா கொண்டாட -என் அருமைத் தமிழ் மக்களை அன்போடு வேண்டுகிறேன்! எ‌ன்றமுத‌ல்வ‌ரகருணா‌நி‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil