பொங்கலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனைத்து ஏற்பாடும் தயார் நிலையில் இருந்த நிலையில் உச்ச நீதிமன்றம் தடையால் தென் மாவட்டத்தில் ஒருவகையான பதற்றம் ஏற்பட்டுள்ளது. போட்டிகள் நடக்கும் முக்கிய ஊர்களில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் பொங்கல்விழாவையொட்டி ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த அலங்காநல்லூரில் தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரி அங்குள்ள கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இந்த நிலையில் ஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதிமன்றம் நேற்று தடைவிதித்தது. இதனால் அலங்காநல்லூர் கிராமமே சோகத்தில் மூழ்கியது.
ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டதால் அதற்கு அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய பகுதிகளிலும் பதட்டநிலை காணப்படுகிறது. இதனால் அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். 24 மணிநேரமும் அங்கு காவல்துறையினர் ரோந்து சுற்றி வருகின்றனர். உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கூட்டம் போட்டு பேசவோ, போஸ்டர்கள் ஒட்டவோ காவல்துறையினர் தடைவிதித்து உள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை அடுத்துள்ள சூரக்குடி கிராமத்தில் கோவில் விழாவையொட்டி ஆண்டுதோறும் மார்கழி மாத கடைசி வெள்ளிக்கிழமை அன்று மஞ்சுவிரட்டு நடத்தப்படுவது வழக்கும். இந்த நிலையில் சிங்கம்புணரி அருகே காவல்துறையினரின் தடையை மீறி 100 மாடுகள் கலந்து கொண்ட மஞ்சுவிரட்டு நடைபெற்றது.
இன்று காலை காவல்துறையினர் அந்த கிராமத்துக்கு அதிரடியாக நுழைந்தனர். போட்டி நடத்த மாட்டோம் என்று எழுதி கொடுத்த அம்பலக்காரர் மெய்யப்பன் (65), ஊர் பிரமுகர்கள் அன்பு (48), உத்தமபுரத்திரன் (62) ஆகியோரை கைது செய்து திருப்பத்தூர் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வழக்கும் பதிவு செய்துள்ளனர். இதனால் கிராம மக்களிடையே பரபரப்புஏற்பட்டது. கிராமே திரண்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.