தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் பேச்சுக்கள் ஒட்டு கேட்கப்படுவதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாற்றியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று அளித்த பேட்டியில், பெரம்பலூர், அரியலூர் பகுதிகளில் பா.ம.க. ஆதரவாளர்கள் தொடர்ந்து அச்சுறுத்தப்பட்டு வருகின்றனர். பொய் வழக்குகள் போடப்பட்டும், உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் சட்ட விரோத நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக தமிழ்நாட்டில் அரசியல் கட்சி தலைவர்கள், பிரமுகர்களின் நடவடிக்கைகள், பேச்சுக்கள் கண்காணிக்கப்படுகின்றன. ஒட்டு கேட்கப்படுவது அதிகரித்து வருகிறது. பா.ம.க.வை பொறுத்தவரை வன்முறைக்கு இடமே இல்லை. இலங்கை தமிழர்களின் இன்னல்களை போக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில அரசு வலியுறுத்த வேண்டும். இது குறித்து முதலமைச்சருக்கு நான் மீண்டும் கடிதம் எழுதியிருக்கிறேன். தமிழ்நாட்டில் மேலும் இரண்டு சாராய ஆலைகள் திறக்கப்படுவதாக கூறப்படுகிறது. இது உண்மையானால், இதுபற்றி அரசு விரிவாக விளக்க வேண்டும்.
வெளிச்சந்தையில் உண்மையிலேயே சிமெண்ட் விலையை குறைக்க வேண்டும் என்றால் உற்பத்தியாளர்கள் ஒரு சிறு பகுதியாய் குறைந்த விலைக்கு விற்கிறோம் என்பதற்கு பதிலாக ஒட்டுமொத்த விலையையும் குறைத்து அறிவிக்க வேண்டும். இதற்கு அவர்கள் முன்வராவிட்டால் தனியார் சிமெண்ட் ஆலைகளை நாட்டுடைமையாக்கும் நடவடிக்கையை அரசு முனைப்புடன் மேற்கொள்ள வேண்டும்.
நாட்டுடைமையாக்கும் சட்ட மசோதா தயாரிக்கும் பணி தொடங்கிவிட்டதாக முதலமைச்சர் அறிவித்தார். அந்த பணி நின்றுவிடாமல் தொடர வேண்டும். 1969ல் பிரதமராக இருந்த இந்திரா காந்தி மிக துணிச்சலாக தனியார் வங்கிகளை நாட்டுடைமையாக்கி சரித்திரத்தில் இடம்பெற்றது போல, மக்கள் நலனை கருதி தனியார் சிமெண்ட் ஆலைகளை துணிச்சலாக நாட்டுடைமையாக்கி முதலமைச்சரும் சரித்திரத்தில் இடம்பெற வேண்டும். இதற்கான மசோதாவை வரும் பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே அறிமுகப்படுத்த வேண்டும். இப்படி அவர் நடவடிக்கை எடுத்தால் முதலமைச்சரின் வீடு தேடி சென்று வாழ்த்து தெரிவிக்கும் முதல் ஆளாக நான் இருப்பேன். சென்னை தீவுத்திடலில் அவருக்கு மாபெரும் பாராட்டு விழாவும் நடத்துவேன் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.