''பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தினால் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும்'' என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எச்சரித்துள்ளது.
மதுரையில் கடந்த 3 நாட்களாக நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 19வது மாநில மாநாட்டின் இறுதி பொதுக் கூட்டம் நேற்று இரவு தமுக்கம் மைதானத்தில் நடந்தது.
இதில், அக்கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத் பேசுகையில், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வதால் ஏற்படும் சுமையை அப்பாவி மக்கள் மீது திணிப்பதற்கு மத்திய அரசு முயற்சிக்க கூடாது என்று ஏற்கனவே இடது சாரி கட்சிகள் வலியுறுத்தியுள்ளன என்றார்.
உலக அளவில் பெட்ரோலிய பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருப்பதை குறிப்பிட்ட அவர், வரிவிதிப்பை முறைப்படுத்துவதை விட்டுவிட்டு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவதை மார்க்சிஸ்ட் கட்சி ஏற்றுக் கொள்ளாது காரத் கூறினார்.
மேலும், பெட்ரோலிய பொருட்களின் மீதான வரி விதிப்பை குறைப்பது அல்லது முறைப்படுத்துவதன் மூலம் பெட்ரோலிய நிறுவனங்களின் சுமைகளை குறைப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காரத் வலியுறுத்தினார்.