அரசு புறம்போக்கு நிலத்தில் 5 ஆண்டுகளுக்கு மேல் குடியிருப்பவர்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க தமிழக அமைச்சரைவ முடிவு செய்துள்ளது என்று அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் நேற்று நடந்த 24-வது அமைச்சரவை கூட்டத்துக்கு பின்னர் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்களில் 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட்டி குடியிருப்பவர்களுக்கு அந்த நிலங்கள் அரசின் உபயோகத்திற்குத் தேவையில்லையெனில், அங்கு இருந்துவரும் குடியிருப்புகளுக்கு பட்டா வழங்கி முறைப்படுத்த ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது.
அமைச்சரவைக் கூட்டத்தில், இதுவரை 10 ஆண்டுக்கு மேலாக குடியிருப்பவர்களுக்கு மட்டுமே மனைப்பட்டாக்கள் வழங்கப்படலாம் என்றிருந்ததை மாற்றி, 5 ஆண்டுக்கு மேலாக குடியிருப்பவர்களுக்கும் மனைப்பட்டாக்களை வழங்கலாம் என்றும் கூறி, அதனை அமைச்சரவை ஏற்றுக் கொண்டது.
அரசு பொது விநியோகத் திட்டத்தைப் பொறுத்தவரை போலி கார்டுகளை கண்டுபிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. எரிவாயு இணைப்புடன் கூடிய இலவச அடுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் குடும்ப அட்டைகள் இல்லாத குடும்பங்களுக்கு புதிதாக குடும்ப அட்டைகள் வழங்கும் பணியும் முறைப்படுத்தப்பட்டு விரைவுபடுத்தப்பட்டு வருகிறது. புதிதாக குடும்ப அட்டைகள் நகரப் பகுதிகளில் 20 லட்சம் குடும்பங்களுக்கும், கிராமப் பகுதிகளில் 20 லட்சம் குடும்பங்களுக்கும் இதுவரை வழங்கப்பட்டுள்ளன.
இந்தக் குடும்ப அட்டைகளுக்கு இதுவரை மண்எண்ணெய் வழங்கப்படவில்லை. பொங்கலை முன்னிட்டு சிறப்பு நேர்வாக இந்த மாதம் முதல், புதிதாக வழங்கப்பட்டுள்ள குடும்ப அட்டைகள் ஒவ்வொன்றுக்கும் தலா ஒரு லிட்டர் வீதம் மண்எண்ணெய் வழங்குவதென்றும் - வருகின்ற மாதங்களிலும் இதனைத் தொடர்வதென்றும் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.