கொலை, கொள்ளை, கற்பழிப்பு வழக்கு உள்ளிட்ட 18 -க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி செல்வத்தை இன்று மதுரைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் காவல் துறையினர் ரவுடிகளை ஒழிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் மதுரையைச் சேர்ந்த ரவுடி அழகரைக் காவல் துறையினர் கைது செய்தனர். அவனிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் இன்று மாலை மதுரையில் கட்டப் பஞ்சாயத்து, கொலை, கொள்ளை, கற்பழிப்பு, கொலைச் சதி திட்டம் தீட்டுதல் உள்ளிட்ட 18 க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய செல்வம் என்ற வரிச்சூர் செல்வத்தை ( 40 ) கைது செய்துள்ளனர்.
செல்வம் நீண்ட காலமாகவே காவல் துறையினரிடம் சிக்காமல் இருந்து வந்தவன் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்ணா நகரில் உள்ள ஒரு எலெக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் தனது வாகனத்தில் உள்ள டேப் ரிக்கார்டரை மாற்றித் தரச் சொல்லி தகராறு செய்து கொண்டிருந்த போது காவல் துறையினர் செல்வத்தைச் சுற்றி வளைத்துள்ளனர். அவன் காவல் துறையினரிடமிருந்து தப்பியோடியுள்ளான். காவல் துறையினர் செல்வத்தை தொடர்ந்து விரட்டிச் சென்று குருவிக்காரன் சாலை சோதனைச் சாவடி அருகே கைது செய்ததாக மதுரை மாநகர காவல் துறை ஆணையர் நந்தபாலன் தெரிவித்துள்ளார்.