தமிழகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு மேற்கொள்ள ஓன்பது பேர் கொண்ட வெள்ள நிவாரண குழு சென்னை வந்துள்ளது. இக்குழுவினர் 3 நாட்கள் தமிழகத்தை சுற்றிப் பார்த்து அண்மையில் பெய்த மழையின் போது பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் வெள்ள சேதத்தின் அளவை மதிப்பீடு செய்ய உள்ளனர்.
முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மாநில வருவாய் துறைச் செயலாளர் அம்புஜ் சர்மா, தமிழகத்தின் அண்மையில் ஏற்பட்ட வெள்ள சேதத்தை நேரில் பார்வையிட்டு, சேதத்தின் அளவை மதிப்பீடு செய்ய வந்துள்ள 9 பேர் கொண்ட மத்திய குழுவினர் தலா 3 பேர் அடங்கிய 3 குழுக்களாக பிரிந்து பார்வையிட உள்ளதாக கூறியுள்ளார்.
திட்டக் குழுவின் மூத்த ஆராய்ச்சியாளர் முரளிதரன் தலைமையிலான குழுவினர் திருவள்ளுர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களிலும், செலவினங்கள் துறை இயக்குநர் அலோக் சங்கரா தலைமையிலான குழுவினர் நாகை, திருவாரூர் மாவட்டங்களிலும், உள்துறைச் செயலாளர் தினேஷ் சிங் தலைமையிலான குழுவினர் திருச்சி,மதுரை மாவட்டங்களிலும் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக கூறியுள்ளார்.
வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, சேத விவரங்களை மதிப்பிட்ட பின்னர் வரும் 12 ஆம் தேதி மாநில அரசுடன் இது தொடர்பாக ஆய்வு நடத்த உள்ளதாகவும் தெரிவித்தார். வெள்ள சேதம் தொடர்பான இறுதி அறிக்கை அக்குழுவினர் டெல்லி சென்ற பின்புதான் தாக்கல் செய்யப்படும் என்றும் அம்புஜ் சர்மா தெரிவித்துள்ளார்.