சிமெண்ட் விலையை மூட்டைக்கு ரூ.200-க்கு ஆலை அதிபர்கள் விற்க முன்வந்திருக்கும் நடவடிக்கைக்கு அரசியல் கட்சிகள் இடையே ஆதரவும், எதிர்ப்பும் காணப்படுகிறது. இந்த நடவடிக்கை நடுத்தர மக்களுக்கு பெரிதும் பலன் அளிக்கும் என்று காங்கிரஸ் கட்சியும், இது வெறும் கண்துடைப்பு என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியிருக்கிறார்.
சிமெண்ட் ஆலை அதிபர்கள் முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்து, பெர்மிட் முறையில் நடுத்தர, ஏழை மக்களுக்கு ரூ. 200க்கு சிமெண்ட் விற்பனை செய்ய தயாராக இருப்பதாக உறுதி அளித்தனர். இது குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் எம்.கிருஷ்ணசாமி : நியாய விலைக் கடைகளில் சிமெண்ட் விநியோகம் தொடர்பான அரசின் முடிவையும், நடவடிக்கையையும் வரவேற்கிறோம். இது நடுத்தர மக்களுக்குப் பெரிதும் பயன்படும் திட்டம். சிமெண்ட் விலை உயர்வையும், தட்டுப்பாடு ஏற்படுவதையும் இது தடுக்கும். கட்டுமானத் தொழிலில் ஏற்பட இருந்த பெரிய சரிவு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதற்காக முயற்சி மேற்கொண்ட முதல்வருக்கு நன்றி.
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் : வெளிச்சந்தையில் உயர்ந்துள்ள சிமெண்ட் விலையைக் குறைக்க முன்வராத தனியார் ஆலைகள், உற்பத்தியில் சொற்ப அளவை குறைந்த விலையில் விற்பதாக அறிவித்திருப்பது வெறும் கண்துடைப்பாகும். இறக்குமதி செய்யப்படும் சிமெண்ட்டை மூட்டை ஒன்றுக்கு ரூ.160க்கு விற்க முடிகிறபோது, உள்ளூரில் உற்பத்தி செய்கின்ற சிமெண்ட்டை ரூ.200க்கு விற்க முன்வந்திருப்பதை எப்படி விலை குறைப்பு என்று ஏற்றுக் கொள்ள முடியும்?
தமிழக பா.ஜ.க. தலைவர் இல.கணேசன் : அரசு விநியோகிக்கிற பொருள்கள் முறைப்படி மக்களுக்குக் கிடைப்பது இல்லை. ஆளும் கட்சியினர் லாபம் ஈட்டும் வகையில் அது தவறாகப் பயன்படும். குறைந்த விலையில் சிமெண்ட் தராவிட்டால், தனியார் சிமெண்ட் ஆலைகளை அரசே ஏற்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தது, அந்த ஆலையின் அதிபர்கள் தன்னைச் சந்தித்து கவனிக்க வேண்டும் என்பதற்காக விடப்பட்டதோ என சந்தேகிக்கத் தோன்றுகிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் : நியாய விலைக் கடைகளில் சிமெண்ட் விநியோகிப்பது என்பது சரியான ஆலோசனைதான். ஆனால் எந்த அளவு, யாருக்குக் கொடுப்பது என்பது போன்ற விடயங்கள் யோசித்துப் பார்க்க வேண்டிய ஒன்று. இல்லை என்றால், இதுவும் கறுப்புச் சந்தையில் செல்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டு விடும்.ஆகவே இது குறித்து ஆலோசனை செய்யப்பட வேண்டும்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் : முன்பு வெளிச்சந்தையில் ஒரு விலைக்கும், அரசின் மூலமாக கண்ட்ரோல் விலைக்கும் சிமெண்ட் விற்கப்பட்டது. அதனால் நிறைய முறைகேடுகள் நடைபெற்றன. எனவே அந்த முறை கைவிடப்பட்டது. தற்போது மீண்டும் அதே நிலையை ஏற்படுத்துவதைப் போல அரசின் நடவடிக்கை அமைந்துள்ளது. மக்களுக்கு குறைந்த விலையில் சிமெண்ட் கிடைக்கும் என்பதை விட, பிரச்சனையில் இருந்து ஆட்சியாளர்கள் தப்பிக்க செய்யப்படுகிற உத்தி இது.