அரசு மேல்நிலைப் பள்ளிகளில் புதிதாக 100 விவசாய பட்டதாரிகள் ஆசிரியர்கள் இந்த ஆண்டு நியமிக்கப்பட உள்ளனர். இவர்கள் மாநில வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் விவசாயம் ஒரு பாடமாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த திட்டம் கடந்த 2000ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இதன்படி, மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி பிரிவில் விவசாய பாடமும் சேர்க்கப்பட்டது. தொடக்கமாக 300 அரசு மேல் நிலைப்பள்ளிகளில் விவசாய கல்வி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக 2001ஆம் ஆண்டு 82 விவசாய பட்டதாரி ஆசிரியர்கள் முதல் முறையாக நியமிக்கப்பட்டனர்.
மாநில வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர்கள் பட்டதாரி ஆசிரியர் நிலையில் பணி அமர்த்தப்பட்டவர்கள், தொழிற்கல்வி மாணவர்களுக்கு விவசாயம் தொடர்பான அடிப்படை பாடங்களை சொல்லிக் கொடுப்பது அவர்களின் பணி ஆகும். பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ள விவசாய கல்வி திட்டம் 2007-08ஆம் ஆண்டில் மேலும் 100 பள்ளிகளுக்கு விரிவுப்படுத்தப்படும் என்று பட்ஜெட்டில் அரசு அறிவித்திருந்தது.
இந்தநிலையில், விவசாய பட்டதாரி ஆசிரியர் பணி நியமனம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூலம் (சீனியார்ட்டி) மூலம் 100 பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான பணிகளை ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொள்ளும் என்று அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
எம்.ஏ., எம்.எஸ்சி. உள்ளிட்ட முதுநிலைப் பட்டப்படிப்புகளைப் போன்று விவசாயம், என்ஜினீயரிங், மருத்துவம் போன்ற தொழிற்படிப்பு களையும் சென்னை சாந்தோமில் உள்ள மாநில செயல்முறை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தான் பதிவு செய்ய வேண்டும்.
தற்போது இந்த வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய, தோட்டக்கலை பட்டதாரிகள் பதிவு செய்துவிட்டு அரசு வேலைக்காக காத்திருக்கிறார்கள். இவர்கள் தவிர ஆண்டு தோறும் சுமார் 700 பேர் படித்து முடித்துவிட்டு வெளியே வருகிறார்கள்.