ஆயிரத்து 500 கிராமிய கலைஞர்கள் பங்கேற்கும் சென்னை சங்கமம் நிகழ்ச்சி 2வது ஆண்டாக சென்னை யில் நடக்க உள்ளது. இதனை முதலமைச்சர் கருணாநிதி இன்று துவங்கி வைக்கிறார்.
தமிழகத்தில் கிராமியக் கலைகளுக்கு புத்துணர்ச்சியும், புதுவாழ்வும் அளிக்கும் நோக்கத்தில் கடந்த ஆண்டில் சென்னையில் 'சென்னை சங்கமம்' என்ற பெயரில் பெரிய அளவில் விழா நடந்தது. இதன் மூலம் கிராமிய கலைகளை நகரத்து மக்களும் தெரிந்து கொள்ளும் வகையில், கலைஞர்களுக்கு அதன் மூலம் ஒரு புதுவாழ்வு கிடைக்கக்கூடும் என்பதாலும் தமிழக அரசு இந்த விழாவுக்கு உதவிக்கரம் நீட்டியது.
இதைத் தொடர்ந்து சென்னை சங்கமம் நிகழ்ச்சி 2வது ஆண்டாக இந்த ஆண்டும் அரசு சுற்றுலா வளர்ச்சித்துறை ஒத்துழைப்புடன் சென்னையில் நடக்கிறது. இது குறித்து தமிழ் மையம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி செய்தியாளர்களிடம் கூறுகையில், கிராமியக் கலைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கில் 'சென்னை சங்கமம்' நிகழ்ச்சி ஜனவரி 10ஆம் தேதி (இன்று) முதல் வரும் 17ஆம் தேதி வரை நடக்கிறது. இந்த ஆண்டும் 65க்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைகள் சென்னையின் பல்வேறு இடங்களில் நடக்கும்.
கடந்த ஆண்டை விட மிக அதிகமாக 1,300 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் சென்னையில் குவிந்திருந்திருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியை நேரடிய இணையதளத்தில் பார்க்கலாம். இந்த விழா முதலமைச்சர் கருணாநிதி இன்று துவங்கி வைக்கிறார். அப்போது, 120 குழந்தைகள் பங்குபெறும் கிராமிய நிகழ்ச்சி நடக்கும்.
அதன் பிறகு, மயிலாப்பூர் நாகேசுவரராவ் பூங்கா, தி.நகர் நடேசன் பூங்கா, அண்ணாநகர் டவர் பூங்கா, கே.கே.நகர் சிவன் பூங்கா, பெரம்பூர் டீ.ஆர்.பி.சி.சி. பள்ளி மைதானம், பல்லாவரம கன்டோன்மென்ட் பள்ளி மைதானம், வளசரவாக்கம் பெரியார் விளையாட்டுத் திடல், பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரை மை லேடீஸ் பூங்கா, ராயபுரம் அண்ணா பூங்கா, நுங்கம்பாக்கம் சுதந்திர தின பூங்கா, நந்தம்பாக்கம் டிரேட் சென்டர், மெரினா ராணி மேரி கல்லூரி, தீவுத் திடல் ஆகிய 20 இடங்களில் இந்த நிகழ்ச்சிகள் நடக்கும். மற்ற நகரங்களிலும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் விரைவில் நடத்தப்படும் என்று கனிமொழி கூறினார்.