சவேரா ஓட்டலில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மேடை சரிந்து ஒருவர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சவேரா ஓட்டல் தலைவர் வி.வி.எஸ்.ரெட்டியை காவல்துறையினர் இன்று கைது செய்தனர்.
புத்தாண்டையொட்டி ராதாகிருஷ்ணண் சாலையில் உள்ள சவேரா ஓட்டலில் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நீச்சல் குளத்தின் மீது பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டு அதில் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அப்போது மேடை சரிந்து நீச்சல் குளத்தில் அனைவரும் விழுந்தனர். இதில் அக்னிஹோத்ரி என்ற பொறியாளர் மூச்சு திணறி உயிரிழந்தார். மேலும் 2 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து ராயப்பேட்டை உதவி ஆணையர் ரவீந்திரன், ஆய்வாளர் ஜீவானந்தம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
ஏற்கனவே ஓட்டல் மேலாளர் மைக்கேல் அந்தோணி, மேடை அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட நரேந்திர சிங் மற்றும் ரவி ஆகிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்கள் தற்போது விடுதலை பிணையில் உள்ளனர்.
இந்நிலையில், ஓட்டலில் மேடை அமைக்க குறிப்பிட்ட இடத்தில் உரிமம் பெற்று ஆனால், அதற்கு மாறாக நீச்சல் குளத்தில் மேடை அமைக்கப்பட்டதாக விதிமுறை மீறப்பட்டுள்ளதாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இது தொடர்பாக உரிமம் பெற விண்ணப்பித்து இருந்த ஓட்டல் தலைவர் வி.வி.எஸ்.ரெட்டியை காவல்துறையினர் இன்று கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.