குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலைக்கு தடுப்பூசி போடுதல், நடமாடும் 100 மருத்துவ குழுக்களை துவக்கி வைத்தல், 1000 செவிலியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்குதல், தொடக்க சுகாதார மையங்களை கணினி மயமாக்குதல் ஆகிய திட்டங் களை முதலமைச்சர் கருணாநிதி இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் துவக்கி வைத்தார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், போலியோ, காச நோய், தட்டம்மை மற்றும் ரணஜன்னி ஆகிய நோய்கள் தடுப்பூசிகள் அளிப்பதன் மூலம் தமிழ்நாட்டில் இந்த நோய்கள் முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, தடுப்பு மருந்து திட்டத்தில் தமிழகம் முன்னோடி மாநிலமாகத் திகழ்வதால் மஞ்சள் காமாலை நோய்க்கு இலவசமாக தடுப்பூசி போடும் திட்டத்தை நடைமுறைப்படுத்திட மத்திய அரசு, தமிழகத்தைத் தேர்வு செய்துள்ளது.
மஞ்சள் காமாலை நோயிலிருந்து பாதுகாப்பு பெற, முதல் தவணையாகக் குழந்தை பிறந்தவுடன் 15 நாட்களுக்குள்ளும், இரண்டாம் தவணையாக 6-வது வாரமும், மூன்றாம் தவணையாக 14-வது வாரமும் மஞ்சள் காமாலை-பி தடுப்பூசி போடப்பட வேண்டும், வசதி யுள்ள பெற்றோர்கள் இந்தத் தடுப்பூசியைத் தனியார் மருத்துவர்கள் மூலம் தங்கள் குழந்தைகளுக்கு போட்டுக் கொள்கின்றனர்.
விலை கூடுதலான இந்தத் தடுப்பூசியை எல்லாக் குழந்தைகளுக்கும் கிடைக்கச் செய்திட வேண்டும் என்னும் உயரிய நோக்கத்துடன், தமிழகம் முழுவதும் ரூ.7 கோடியே 20 லட்சம் செலவில் தமிழக அரசு, அரசு மருத்துவமனைகள், தொடக்கச் சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் இத்தடுப்பூசியை போட்டுக் கொள்ள வகை செய்யும் மஞ்சள் காமாலை-பி தடுப்பூசி போடும் இத்திட்டத்தையும் முதலமைச்சர் கருணாநிதி தொடங்கி வைத்தார். இதன் மூலம் 1 வருடத்திற்கு 11 லட்சம் குழந்தைகள் பயன் அடைவார்கள்.
தொலைதூர கிராமங்களில் வாழும் ஏழை மக்களைப் பாதிக்கக் கூடிய காச நோய், மலேரியா (காய்ச்சல்), தொழு நோய், வயிற்றுப் போக்கு, டைபாய்டு போன்ற நோய்களைக் கண்டுபிடித்து, அவற்றிற்குரிய சிகிச்சையளித்து மக்களைக் காப்பதற்காக ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு ஓட்டுநர், ஒரு துப்புரவுப் பணியாளர் ஆகியோருடன் நடமாடும் மருத்துவ ஊர்தியையும் கொண்ட 100 நடமாடும் மருத்துவக் குழுக்கள் 2006-2007 நிதியாண்டில் ஏற்படுத்தப்பட்டு, வெற்றிகரமாகச் செயல்பட்டு வருவதைத் தொடர்ந்து இவ்வாண்டில் 6 கோடி ரூபாய் செலவில் 100 நடமாடும் ஊர்திகளை வழங்கி 100 வட்டார தொடக்க சுகாதார நிலையங்களுடன் இணைக்கப்பட்டுள்ள மேலும் 100 நடமாடும் மருத்துவக் குழுக்கள் திட்டத்தையும்,
2006-2007 ஆம் ஆண்டில் ஒவ்வொரு தொடக்க சுகாதார நிலையத்திற்கும் 3 செவிலியர்கள் வீதம், 600 தொடக்க சுகாதார நிலையங்களில் 1800 செவிலியர்கள் நியமனம் செய்யப்பட்டு, ஊரகப் பகுதிகளில் 24 மணி நேரமும் இயங்கும் மகப்பேறு உதவித் திட்டம், வெற்றிகரமாகச் செயல்பட்டு வருவதைத் தொடர்ந்து இவ்வாண்டில் (2007-08) மேலும் 220 தொடக்க சுகாதார நிலையங்கள் 24 மணி நேரமும் செயல்படும் வகையில், ஒவ்வொரு சுகா தார நிலையத்திற்கும் 3 செவிலியர்கள் வீதம் 660 செவிலியர்களும், மருத்துவ மனைகளில் ஏற்கனவே காலியாகவுள்ள பணியிடங்களுக்கு 340 செவிலியர்களும் நியமிக்கப்பட மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் பராமரித்து வரும் பணிமூப்புப் பட்டியலிலிருந்து தகுதி பெறும் 1000 செவிலியர்களுக்கும், பொது சுகாதாரத் துறையில் 66 சுகாதார ஆய்வாளர்களுக்கும் பணி நியமன ஆணைகள் வழங்கியும்
மருத்துவத் துறை சார்ந்த தகவல் பரிமாற்றத்திற்கு உதவும் வகையில் 2006-07 ஆம் ஆண்டு 385 வட்டார தொடக்க சுகாதார நிலையங் களும் இணையதள வசதியுடன் கணினிகள் வழங்கப் பட்டுள்ளதைத் தொடர்ந்து, தற்போது மேலும், 1036 தொடக்க சுகாதார நிலையங் களுக்கு இணைய தள வசதியுடன் கணினிகள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் கருணாநிதி இன்று தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார்.
விழாவில் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, எம்.ஆர். கே.பன்னீர்செல்வம், தலைமை செயலாளர் எல்.கே.திரிபாதி, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் வி.கே.சுப்புராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.