கடந்த 2 நாட்கள் பெய்த தொடர் மழையால் சென்னை மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 500 சிறிய குளங்கள் நிரம்பி உள்ளது. சென்னைக்கு குடிநீர் தரும் புழல் ஏரி நிரப்பி வழிகிறது.
தமிழகத்துக்கும் இலங்கைக்கும் இடையே தென்மேற்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த 2 நாட்களாக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்தது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள ஏரிகளின் நீர்ப் பிடிப்பு பகுதிகளிலும் அதிக மழை பெய்ததால் 500 சிறிய ஏரி குளங்கள் நிரம்பி விட்டன.
திருவள்ளூரில் நேற்றிரவு 60 மி.மீட்டர் மழையும், பொன்னேரியில் 75 மி.மீ. மழையும், சோழவரத்தில் 79 மி.மீட்டரும், தாமரை பாக்கத்தில் 75 மி.மீட்டர் மழையும் பெய்துள்ளது. இதனால் பெரிய ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரி நிரம்பி விட்டது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. தற்போது 34.95 அடி அளவு தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 1434 கனஅடி தண்ணீர் வருவதால் 994 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதேபோல் புழல் ஏரிக்கு 1,500 கனஅடி தண்ணீர் வந்ததால் மாலை 4 மணிக்கு வினாடிக்கு 700 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதன் பிறகு ஏரிக்கு நீர் வரத்து குறைந்த ஏரி அடைக்கப்பட்டது. குடிநீருக்கு மட்டும் 130 கனஅடி திறந்து விடப்பட்டுள்ளது. 21.2 அடி உயரம் உள்ள புழல் ஏரியில் தற்போது 21.14 அடிக்கு தண்ணீர் உள்ளது.
சோழவரம் ஏரியின் முழு கொள்ளளவு 18.86 அடி. தற்போது 17.86 அடி அளவுக்கு தண்ணீர் உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் 24 அடிக்கு 22 அடிக்கு தண்ணீர் உள்ளது. இந்த ஏரி நிரம்ப இன்னும் 2 அடி தான் தேவை என்பதால் நீர் வரத்தை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.
அனைத்து ஏரிகளும் நிரம்பிய நிலையில் இன்றும் கனமழை பெய்தால் ஏரிகளை திறக்கும் சூழ்நிலை ஏற்படும் என்பதால் அதிகாரிகள் ஒவ் வொரு ஏரிகளையும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.