சென்னையில் நேற்று நள்ளிரவு காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் 5 ரவுடி கும்பல் சிக்கியது. அவர்கள் தங்கி இருந்த வீடுகளில் இருந்த வெடிகுண்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
தமிழகம் முழுவதும் ரவுடிகள் சாம்ராஜ்ஜியத்தை ஒடுக்க காவல்துறையினர் அதிரடி வேட்டை நடத்தி வருகின்றனர். இதில் நூற்றுக்கணக்கான ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் சென்னையில் சிறு சிறு கும்பலாக ஏராளமான கூலிப்படைகள் நடமாடுவது குறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் நாஞ்சில் குமரன் தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை பிடிக்க காவல் ஆணையர் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து வடசென்னை இணை ஆணையர் ரவி மேற்பார்வையில் புளியந்தோப்பு துணை ஆணையர் சம்பத் தலைமையில் தனிப்படை காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்தனர். நேற்றிரவு தனிப்படை காவல்துறையினர் அரும்பாக்கத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கு இடமான ஒரு காரை வழிமறித்து சோதனை செய்தனர். அந்த காரில் 5 பேர் இருந்தனர். அவர்களை அரும்பாக்கம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
தீவிர விசாரணையில் அவர்களில் ஒருவன் மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி அழகர் என்று தெரிய வந்தது. இவன் மதுரை பெத் தனியாபுரத்தில் வசித்து வந்தான். அவனுடன் பிடிப்பட்ட மற்ற 4 பேரில் விஜயகுமார், செந்தில்குமார் ஆகியோர் அழகரின் தம்பி. மற்றொரு செந்தில்குமார், கணேசன் ஆகிய 2 பேரும் அழகர் கோஷ்டியைச் சேர்ந்த கூலிப்படை ஆட்கள் என்று தெரிந்தது. அவர் உள்பட 5 பேரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில், அழகரின் ரவுடி கும்பல் சமீபத்தில் மதுரையில் இருந்து சென்னை அரும்பாக்கம் வள்ளுவன் சாலையில் உள்ள சுகுணா அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருந்தது தெரிந்தது. இதையடுத்து காவல்துறையினர் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ரவுடி கும்பல் தங்கி இருந்த வீட்டில் சக்தி வாய்ந்த 10 வெடிகுண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டது. 13 அறிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.