தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சித் துறை பணியாளர்களுக்கு பொங்கல் போனசாக ஒரு மாத ஊதியம் வழங்கப்படுகிறது. சத்துணவு திட்டப் பணியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கும், சிறப்பு ஊதியமாக ரூ.1,000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழக அரசின் பணியாளர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சித் துறை பணியாளர்கள் ஆகியோருக்கு 1999-2000 ஆண்டிற்கான 30 நாட்கள் பொங்கல் போனசும், சிறப்பு போனசாக ரூ.825ம், 2000-2001ல் வழங்கப்பட்டது. 2000-2001 ஆம் ஆண்டிலிருந்து நிறுத்தி வைக்கப்பட்ட இந்தச் சலுகையினை இந்த அரசு பொறுப்பேற்றவுடன் மீண்டும் 2005-06 ஆம் ஆண்டுக்கான பொங்கல் போனசும், சிறப்பு போனசுமாக 2007 ஆம் ஆண்டு பொங்கலையொட்டி வழங்கியது.
2006-07 ஆம் ஆண்டிற்கும் இந்தச் சலுகையினை தொடர்ந்து வழங்குவது என அரசு முடிவெடுத்து 'சி' மற்றும் 'டி' பிரிவு ஊழியர்கள் அனைவருக்கும் 30 நாட்கள் ஊதியத்திற்கு இணையாக போனஸ் வழங்கிடவும், 'ஏ' மற்றும் 'பி' பிரிவு அலுவலர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட சிறப்பு போனஸ் 825 ரூபாய் என நிர்ணயித்து பத்து ஆண்டுகளாகி விட்டதாலும், விலைவாசி உயர்வினை கருத்தில் கொண்டும் சிறப்பு போனசை ரூ.1,000 என உயர்த்தி வழங்கிடவும், அதே போல் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட பொங்கல் பரிசான 150 ரூபாயை உயர்த்தி ரூ.300 என வழங்கிடவும் முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.
'சி' மற்றும் 'டி' பிரிவு ஊழியர்கள் அனைவருக்கும் மாதச் சம்பளம் 2,500 ரூபாய் என்ற அளவிலேயே கணக்கிடப்பட்டு போனஸ் வழங்கப்படும். உள்ளாட்சி நிறுவனங்கள் மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகிய அனைவருக்கும் இந்த போனஸ் வழங்கப்படும்.
ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேலாக பணிபுரிந்த சில்லரைச் செலவினத்தின் கீழ் மாத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் பெறும் முழுநேர மற்றும் பகுதிநேர பணியாளர்கள், தொகுப்பூதியம் பெறும் பணியாளர்கள், தொகுப்பூதியம் பெறும் சத்துணவுத் திட்ட பணியாளர்கள் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்கள், வரையறுக்கப்படாத ஊதிய விகிதத்தில் உள்ள சத்துணவுத் திட்டப் பணியாளர்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் உட்பட ஒப்பந்தப் பணியாளர்கள், ஒப்பந்த அடிப்படையிலான தற்காலிக உதவியாளர்கள் மற்றும் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட நிர்ணயிக்கப்பட்ட மாதாந்திர ஊதியம் பெறும் பணியாளர்களுக்கு சிறப்பு மிகை ஊதியமாக ரூ.1,000 வழங்கப்படும்.
இந்த ஆணையின் மூலம் அரசுக்கு இந்த ஆண்டில் சுமார் ரூ.267.08 கோடி செலவாகும். இதனால் சுமார் 12.68 லட்சம் அரசு அலுவலர்களும், 5.38 லட்சம் ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களும் பயனடைவார்கள் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.