தமிழகத்தில் உருவாகும் 3வது அணியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்காது என்று அக்கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.
புதுவை மாநில இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் 19-வது மாநில மாநாட்டை துவக்கி வைத்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டியன் பேசுகையில், காங்கிரஸ், பாரதிய ஜனதா இல்லாத சரியான 3-வது அணி இன்னும் உருவாகவில்லை. ஆகவே 3-வது அணி அமைப்பதை இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆதரிக்காது. தொழிலாளர்கள், ஏழைகள் ஆகியோரை பாதுகாக்கும், முதலாளித்துவத்தை எதிர்க்கும், மதவாதத்திற்கு எதிரான ஒரு அணி உருவானால் அதுவே சரியான 3-வது அணியாக இருக்க முடியும்.
வகுப்பு வாதத்தை வளர விடக்கூடாது என்பதால்தான், காங்கிரசின் ஆட்டங்களை பொறுத்து கொள்ள வேண்டியுள்ளது. காங்கிரஸ் கட்சி தொழிலாளர்களுக்கு விரோதமாக செயல்படுவதை தொடர்ந்து பொறுத்துக் கொள்ள இயலாது.
தமிழகத்தில் தொழில் தொடங்க வந்துள்ள அயல்நாட்டு தொழில் அதிபர்களுக்கு ஆயிரம் ஏக்கர், பல நூறு ஏக்கர் நிலங்களை தமிழக அரசு கையகப்படுத்தி தருகிறது. ஆனால் ஏழைகள் வீடுகள் கட்டி கொள்ள நிலம் கேட்டால் அதை தருவதில்லை. தமிழகத்தில் 30 லட்சம் மக்கள் வசிப்பதற்கு சொந்த வீடு இல்லாமல் சொந்த நாட்டில் அகதிகளாக உள்ளனர்.
ஏழைகளுக்கு 2 ஏக்கர் நிலம் தரப்போவதாக சொன்னார் கருணாநிதி. ஆனால் அவர் சொன்னபடி முழுமையாக நடக்கவில்லை. தமிழகத்தில் 30 லட்சம் மக்கள் சொந்த வீடு இல்லாமல் இருக்கின்றனர். நாங்கள் ஏக்கர் கணக்கில் கேட்கவில்லை. வீடு கட்டி கொள்ள கிராமங்களில் 3 சென்ட் நிலமும், நகரத்தில் 2 சென்ட் வீதம் ஏழைகளுக்கு வீட்டு மனையாக கொடுங்கள் என்றுதான் கருணாநிதியிடம் வலியுறுத்தி உள்ளோம் என்று தா.பாண்டியன் கூறினார்.