சென்னை அரசு பொது மருத்துவமனையில் குளிர்சாதன வசதியுடன் தனியார் மருத்துவமனைக்கு ஈடாக சிறப்பு வசதிகள் கொண்ட குறைந்த கட்டணத்தில் நவீன சிகிச்சைப் பிரிவை சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் இன்று துவக்கி வைத்தார்.
சென்னை அரசு பொது மருத்துவமனை நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடத்தை 2005 ஜூலை மாதம் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். இந்த மருத்துவமனை 104 கோடியில் கட்டப்பட்டு தனியார் மருத்துவமனைகளுக்கு ஈடாக செயல்பட்டு வருகிறது. 3வது மாடியில் நோயாளிகள் தனி அறையில் தங்கி சிகிச்சை பெற குறைந்த கட்டணத்தில் அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கடந்த இரண்டரை ஆண்டுகளாக இந்த அறைகள் கட்டணம் நிர்ணயிக்கப்படாத காரணத்தினால் அது பயன்படுத்தாமல் இருந்தது. தற்போது அந்த அறைகளை நவீனப்படுத்தப்பட்டு குளிர்சாதன வசதியுடன் தனியார் மருத்துவமனைகளுக்கு ஈடாக உருவாக்கப் பட்டுள்ளன.
இந்த பிரிவில் 202 படுக்கைகள் உள்ளது. ஒரு படுக்கை அறை, 2 படுக்கை அறை, 4 படுக்கை அறைகள் என 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. 79 தனி அறைகளும், 2 படுக்கை அறைகள் 37, 4 படுக்கை அறைகள் 11 என்று ஒதுக்கப்பட்டுள்ளது. நோயாளிகளின் வசதிக்காக தனி அறையில் சிகிச்சை பெற ஒரு நாளைக்கு 600 ரூபாயும், 2 படுக்கைகள் கொண்ட அறைக்கு 300 ரூபாயும், 4 படுக்கைகள் கொண்ட அறைக்கு 200 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, சொகுசு படுக்கை அறைகள், நவீன சொகுசு படுக்கை அறைகள், வி.ஐ.பி. அறைகள் என உருவாக்கப்பட்டுள்ளது. 11 நோயாளிகளுக்கு ஒரு செவிலியர் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், இங்கு சிகிச்சை பெறுவதற்கு மருந்து மாத்திரைகள் வெளியில் இருப்பதைவிட குறைந்த விலையில் வழங்கப்படும். சிகிச்சை பெறுபவர்கள் தமிழ்நாடு மருத்துவ சேவை கழகம் என்ற பெயரில் கட்டணத்தை டி.டி. எடுத்து அனுப்ப வேண்டும்.
இந்த சிறப்புமிக்க புதிய முறை தமிழகத்திலேயே சென்னையில்தான் முதல் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.