தூத்துக்குடி துறைமுகம் கடந்த ஆண்டு ஏபரல் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான 9 மாதத்தில் 153.75 லட்சம் டன் சரக்குகளைக் கையாண்டு சாதனை படைத்துள்ளது.
இது தொடர்பாக தூத்துக்குடி துறைமுக பொறுப்புக் கழகத்தின் துணைத்தலைவர் ஏ.சுப்பையா கூறுகையில், கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் மாதம் வரை தூத்துக்குடி துறைமுகத்திற்கு 153.29 லட்சம் டன் சரக்கைக் கையாள வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அதைவிட அதிகமாக 153.75 டன் சரக்கு கையாளப்பட்டுள்ளது.என்றார்.
மேலும், கடந்த 2006 ஆண்டு இதே காலத்தில் கையாளப்பட்ட சரக்கின் அளவு 134.05 லட்சம் டன் மட்டுமே. அதைவிட 2007இல் 14.7 விழுக்காடு கூடுதலான சரக்கை இத்துறைமுகம் கையாண்டிருக்கிறது.
நிலக்கரி, தாமிரக் குழம்பு, யூரியா, உரங்கள், கட்டுமானப் பொருட்கள், கந்தக அமிலம், சர்க்கரை ஆகியவை அதிகமாக கையாளப்பட்டுள்ளன.
மேலும், முரியேட் ஆஃப் பொட்டாசை 14,570 டன் இறக்குமதி செய்தும், தாமிரக் குழம்பை 20,069 டன் இறக்குமதி செய்தும் இரண்டு புதிய சாதனைகளையும் இத்துறைமுகம் நிகழ்த்தியுள்ளது.
நடப்பு நிதியாண்டில் 203.85 லட்சம் டன் சரக்கை கையாள வேண்டும் என்று அமைச்சகம் இலக்கு நிர்ணயித்து உள்ளத. துறைமுக பயன்பாட்டாளர்கள், துறைமுக பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள், துறைமுகம் தொடர்புடைய அனைவரின் ஒத்துழைப்பும் இருந்தால் இந்த இலக்கை எளிதில் எட்டிவிட முடியும் என்றும் சுப்பையா உறுதிபட கூறினார்.