2009ல் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசுடன் பா.ம.க. இருக்கும். இனி எந்த சூழ்நிலையிலும் பா.ஜ.க. அணியில் இடம்பெற மாட்டோம் என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் செய்தியார்களுக்கு அளித்த பேட்டியில், 2007 ஆம் ஆண்டில் நாங்கள் ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சி என்ற முறையில் எங்கள் கடமைகளை நாங்கள் முழுமையாக நிறைவேற்றி இருக்கிறோம். மக்கள் பிரச்சனைகளை முன்னிறுத்தி போராடியிருக்கிறோம். குறிப்பாக சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உள்ளிட்ட மக்களை பாதிக்கும் பிரச்சனைகளில் எங்களுடைய போராட்டம் மக்களின் கவனத்தை ஈர்த்தது மட்டுமன்றி, அரசாங்கமும் எங்களுடைய கருத்துக்களை ஏற்று செயல்படுத்தும் அளவிற்கு நாங்கள் பணியாற்றி இருக்கிறோம்.
2008 ஆம் ஆண்டை பொறுத்தவரை மதுவுக்கு எதிரான பிரச்சாரத்தை நாங்கள் முன்னெடுக்க உள்ளோம். இதற்காக கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரை நானே வாகனப் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளேன். மதுக்கடைகளை மூடினால் கள்ளச் சாராயம் பெருகும் என்று கூறுகிறார்கள். அரசாங்கமும், அதிகாரிகளும் 6 மாத காலத்திற்கு என்னுடைய யோசனைகளை கேட்டு செயல்படுத்தினால் ஒரு சொட்டு கள்ளச்சாராயம் கூட இல்லாமல் செய்துவிடலாம்.
நாடாளுமன்ற தேர்தல் இப்போதைக்கு வர வாய்ப்பில்லை. 5 ஆண்டு ஆட்சி முழுமையாக நடைபெறும். 2009ல் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசுடன் பா.ம.க. இருக்கும். சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தி.மு.க., அ.தி.மு.க. இல்லாத ஒரு அணியை பா.ம.க. தலைமையில் உருவாக்கி தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியை அமைப்போம். இனி எந்த சூழ்நிலையிலும் பா.ஜ.க. அணியில் இடம்பெற மாட்டோம். தி.மு.க. தரப்பில் இருந்து வெளிவரும் அறிக்கைகளுக்கு பதில் சொல்லி லாவணிக் கச்சேரி நடத்த நான் விரும்பவில்லை.
சிமெண்ட் விற்பனைக்கு தமிழக அரசு எடுத்துள்ள முடிவை வரவேற்கிறோம். இது தனியார் சிமெண்ட் ஆலைகளின் அதிபர்களின் சவாலை தமிழக அரசு ஏற்று முறியடிக்க வேண்டும். கம்யூனிஸ்டு செயலாளர் வரதராஜன் 3-வது அணி அமைக்க போவதாக கூறியிருப்பது பற்றி காலம் வரும்போது கருத்து சொல்வேன். இப்போது அதற்கான காலம் கனியவில்லை என்று ராமதாஸ் கூறினார்.