''இந்துக்களிடம் மட்டும் ஓர வஞ்சனை, பாரபட்சம் காட்டும் பெரியார் தி.க.வினரின் ஊர்வலத்தை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்'' என்று இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் கூறியுள்ளார்.
இது குறித்து ராமகோபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்துக்களின் நம்பிக்கைகளையும், பழக்க வழக்கங்களையும், சடங்கு ஆச்சாரங்களையும் கிண்டல் செய்து பக்தர்களின் உணர்வுகளை வேண்டுமென்றே கொச்சைப்படுத்துவதற்காக பெரியார் தி.க.வினர் நாளை (5ஆம் தேதி) சென்னை தி.நகரிலிருந்து, எம்.ஜி.ஆர். நகர் வரை ஊர்வலம் நடத்தப்போவதாக அறிவித்திருக்கிறார்கள்.
அரசியல் காரணங்களுக்காக யாரையோ திருப்திபடுத்துவதற்காக, இந்த ஊர்வலம் அனுமதிக்கப்பட்டிருப்பது சட்டம், ஒழுங்கு அமைதியை குலைப்பதாகும். கடவுள் உண்டு என்று சொல்ல உங்களுக்கு உரிமை இருக்குமானால் இல்லை என்று சொல்ல மற்றவர்களுக்கும் உரிமை உண்டு என்ற பொறுப்பற்ற வாதத்தை சில அதிகாரிகள் கிளப்பி இருப்பது வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருக்கிறது.
பிற மதத்தினரின் உணர்வுகளை புண்படுத்துவதாக சந்தேகம் ஏற்பட்டால் உடனே பதறிப்போய் செயல்படுகிற அதிகாரிகள், இந்த விசயத்தில் மட்டும் வக்கனை பேசுவது அவருடைய இந்து விரோத மனப்பான்மையைக் காட்டுகிறது. பெரியார் தி.க.வினரைப் போல் முஸ்லீம், கிறிஸ்தவ மதத்தில் உள்ள மூட நம்பிக்கைகளை மக்களுக்கு விளக்கும் விதத்தில் விழிப்புணர்வு பேரணி நாங்களும் நடத்தினால் இவர்கள் அனுமதிப்பார்களா? பெரியார் தி.க.வினருக்கு முஸ்லீம், கிறிஸ்தவ மதத்தை விமர்சித்துப் பேச தைரியமுண்டா?
எனவே அதிகாரிகளின் இந்த மோசமான அணுகுமுறை பக்தர்களுக்கு ஆத்திரமூட்டும் செயல் ஆகும். இந்துக்களிடம் மட்டும் ஓர வஞ்சனை, பாரபட்சம் காட்டும் பெரியார் தி.க.வினரின் இந்த செயலை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று ராமகோபாலன் வலியுறுத்தியுள்ளார்.