வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. சென்னையில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
வடகிழக்கு பருவ மழை காரணமாக தமிழ்நாடு முழுவதும் இந்த ஆண்டு நல்ல மழை பெய்துள்ளது. சமீபத்தில் பெய்த பலத்த மழையால் பல மாவட்டங்களில் வெள்ளச் சேதம் ஏற்பட்டது. கடந்த 2 வாரங்களாக மழை ஓய்ந்து இருந்தது. நல்ல பனியும் பெய்தது. எனவே பருவ மழை முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பருவ மழை முடிந்து விட்டதாக அறிவிக்கப்படவில்லை.
மேலும் சில தினங்கள் வட கிழக்கு பருவ மழை நீடிக்கலாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்த நிலையில் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை (புயல் சின்னம்) உருவாகி இருக்கிறது.
இலங்கைக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே உருவாகி உள்ள இந்த காற்றழுத்த தாழ்வு நிலையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் கடற்கரை மாவட்டங்களில் நேற்று முதல் மழை பெய்து வருகிறது.
சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது. இன்னும் 24 மணி நேரம் கடற்கரை மாவட்டங்களில் மழை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்பு உண்டு. சென்னை நகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். விட்டு விட்டு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னையில் நேற்று முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இரவு 9 மணிக்கு லேசான தூறல் இருந்தது. நள்ளிரவு பலத்த மழை பெய்தது.
இன்று காலை வானம் கரு மேக மூட்டத்துடன் இருந்தது. குளிர்ந்த காற்றும் வீசியது. காலை 9.45 மணியில் இருந்து பலத்த மழை கொட்டியது. சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுயது. இதனால் கடும் போக்குவரத்து வரத்து பாதிப்பு ஏற்பட்டது.
குறிப்பாக வடபழனி, சாலிகிராமம், வில்லிவாக்கம், கோயம்பேடு, விருகம்பாக்கம், தி.நகர், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை நீர் ஆறுபோல் ஓடியது.
கோயம்பேடு பகுதியில் மழை நீர் வெள்ளம் ஓடுகிறது. காய்கறி மார்க்கெட்டுகளில் மழை நீர் புகுந்துள்ளதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.